பாம்பாக பிறந்தால் கூட படம் எடுக்க மாட்டேன்: மயிலாடுதுறையில் வடிவேலு பேட்டி!!!

30th of September 2013
சென்னை::நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஒட்டல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நான் தற்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் தெனாலிராமன் மற்றும் கிருஷ்ண தேவராயர் ஆகிய இரட்டை வேடங்களில் நடித்து வருகிறேன்.

65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. குதிரை ஏற தெரியாத நான் குதிரை ஓட்டும் காட்சியில் நடித்து வருகிறேன். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும். அதன் பிறகு மற்ற படங்களில் நடிக்க இருக்கிறேன்.

கடந்த 2 வருடங்களை என் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கழித்தேன். நகைசுவை காட்சிகளை பார்த்தால் பிரஷர், சர்க்கரை நோய் குறையும். ஆனால் அதற்கு மாறாக ஒரு சில காமெடி காட்சிகளால் பிரஷரும், சர்க்கரையும் எகிறுகிறது.

இரட்டை அர்த்தம் கொண்ட காமெடி காட்சிகளை நான் முடிந்த வரை தவிர்த்து வந்தேன்.

குடும்பத்துடன் அமர்ந்து காமெடியை பார்க்கும் போது அது குழந்தைகளை பாதிக்கும். ஆகையால் இரட்டை அர்த்தம் கொண்ட வசனம் தவிர்க்கப்பட வேண்டும்.

சொந்தமாக படம் எடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. பாம்பாக பிறந்தால் கூட படம் எடுக்க மாட்டேன். கிணற்றை காணவில்லை என்று சினிமாவில் காமெடி பண்ணியது இன்றைக்கு மயிலாடுதுறையில் நிஜத்தில் நடப்பது ஆச்சரியமாக உள்ளது.

சந்திர பாபு, தங்கவேலு, நாகேஷ், சுருளிராஜன் உள்ளிட்ட பலர் எனக்கு பிடித்த காமெடி நடிகர்கள் ஆவார்கள். தமிழ் சினிமாவில் இடைவெளி ஏற்பட்டால் யாரும் திரும்ப நடிக்க வந்த வரலாறு கிடையாது. ஆனால் என்னை பொறுத்த வரை திரும்ப வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளதை உணர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments