ஆஸ்கருக்குச் செல்லும் இந்திய படம்!!!

23rd of September 2013
சென்னை::உலக சினிமாவில் மிகவும் மதிக்கப்படும் விருது ஆஸ்கர் விருது! ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுக்காக, இந்திய மொழிப் படங்களிலிருந்து ஒரு சிறந்த படத்தை தேர்ந்தெடுத்து அனுப்புவது வழக்கம்.
 
அந்த வகையில் இந்த வருடத்திற்கான தேர்வு போட்டியில் கமல்ஹாசனின் விஸ்வரூபம்’, ‘செல்லுலாய்ட்’ (மலையாளம்), ‘பாக் மில்கா பாக்’ (ஹிந்தி), இங்கிலீஷ் விங்கிலீஷ்’ (ஹிந்தி), ‘தி குட் ரோட்’ (குஜராத்தி) என கிட்டத்தட்ட இருபது இந்திய மொழிப் படங்கள் கலந்துகொண்டது. இந்தப் படங்களை, திரையுலக பிரமுகர் கௌதம் கோஷ் தலைமையிலான தேர்வுக் குழுவினர் பார்த்து, அதிலிருந்து ஆஸ்கர் விருது போட்டிக்காக, ஒரு மனதாக குஜராத்தி மொழிப் படமான் ‘தி குட் ரோட்’ படத்தை தேர்வு செய்துள்ளனர்.
 
ஆஸ்கருக்கு செல்லவிருக்கும் இந்தப் படத்தை இந்திய சினிமா வளர்ச்சி கழகம் தயாரிக்க, கியான் கோரி என்பவர் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் ஏற்கெனவே சிறந்த குஜராத்தி திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றிருப்பதும், இந்தப் படத்தின் ஒலிப்பதிவை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி கவனித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘தி குட் ரோட்’ படம் ஆஸ்கர் விருதை அள்ளி வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Comments