குஷ்புவுக்கு இன்று 43வது பிறந்தநாள்!!!

29th of September 2013
சென்னை::கொண்டையில் தாழம்பூ... கூடையில் வாழைப் பூ.... நெஞ்சிலே என்ன பூ... குஷ்பூ... என் குஷ்பூ. என தமிழ் ரசிகர்களைப் பாட வைத்த பெருமைக்குரியவர் நடிகை குஷ்பு.
 
இன்று, தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடும் குஷ்பு கடந்து வந்த பாதை சுவாரஸ்யமானது. குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் துவக்கிய அவர், இன்று நல்ல குடும்பத்தலைவியாக, நடிகையாக, சிறந்த அரசியல்வாதியாக, வெற்றிகரமான தயாரிப்பாளராக என பன்முக வெற்றியாளராக மின்னிக் கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லை.அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரத்தில் அவரைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள் உங்களுக்காக..
 
1970ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மும்பையில் பிறந்தார் குஷ்பு. இவரது உண்மையான பெயர் நாகத் கான்.
 
குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்புலக வாழ்க்கையை ஆரம்பித்தார் குஷ்பு. பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருந்த போதும், சஞ்சய் தத்துடன் நடித்த டர்ட்கா ரிஸ்டா குறிப்பிடத்தக்கது
 
தமிழில் பிரபு ஜோடியாக 1988ம் ஆண்டு ரஜினி, சுகாசினி நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகம் ஆனார்
 
பாசில் இயக்கத்தில், கார்த்திக்குடன் இவர் நடித்த வருஷம் 16 படம் இவருக்கு நல்லரொரு பெயரைப் பெற்றுத் தந்தது
தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்ததைப் போலவே மிகச் சிறந்த படங்கள் மூலம் கன்னட, மலையாள ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

நாட்டாமை, கோலங்கள், அண்ணாமலை, பெரியார், வெற்றி விழா, மன்னன், சிங்காரவேலன் என இவர் நடித்த வெற்றிப் படங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

கையொப்பு என்ற படத்தில் நடித்ததற்காக, 2006ம் ஆண்டு கேரள மாநிலத்தின் விருது பெற்றார் குஷ்பு.

நடிகர் பிரபுவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். இயக்குநர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில், தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் கௌரவத் தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் குஷ்பு. அப்படத்தின் இயக்குநர் அவரது கணவர் சுந்தர்.சி என்பது குறிப்பிடத்தக்கது.

டிவியில் குஷ்பு தொகுத்து வழங்கிய ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேர்பு இருந்தது. அந்நிகழ்ச்சியில் அவர் அணிந்து வரும் ஜாக்கெட்டுகளுக்காகவே அவர் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 2010ம் ஆண்டு அரசியலில் குதித்தார் குஷ்பு. திமுகவில் இணைந்த அவர் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

2005ம் ஆண்டு திருமணத்திற்கு முன் பெண்களின் உறவு குறித்து சர்ச்சையில் சிக்கினார். அதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்குகளுக்காக அலைக்கழிக்கப்பட்டார். மீண்டும் சாமி சிலை இருந்த விழா மேடையில் செருப்புடன் அமர்ந்தார் என பிரச்சினையில் சிக்கினார்.

சமீபத்தில் மேக்ஸிம் பத்திரிக்கை அட்டைப் படத்தில் குஷ்புவின் முகத்தை மார்பிங் செய்து பிகினி உடையில் இணைத்து வெளியிட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சர்ச்சைகளில் சிக்கிய போதும், கோயில் கட்டி கும்பிடும் அளவிற்கும், இட்லிக்கு ‘குஷ்பு இட்லி' என பெயர் வைத்துப் போற்றும் அளவிற்கும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கிறார் குஷ்பு என்பது உண்மையே.!

Comments