கோச்சடையான் படத்தின் பாடல் வரிகள் அனைத்தும் சங்கத் தமிழில்!

29th of August 2013
சென்னை::'கோச்சடையான்' படத்தின் முதல் புகைப்படம் வெளியானதில் இருந்து, படத்தினைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்துக்காக தான் எழுதிய பாடல் ஒன்றை ரஜினிகாந்தின் சம்மதத்தோடு வெளியிட்டு இருக்கிறார் பாடலாசிரியர் வைரமுத்து. கோச்சடையான் சரித்திரக் கதை என்பதால் பாடல் வரிகள் அனைத்தும் சங்கத் தமிழில் இருக்கின்றன.
தீபிகா படுகோன்:
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்...
இதயம்
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே

நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...

இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே

ரஜினிகாந்த்:
பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு யானோ நின்னை மறக்கிலேன்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம் ?
சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் ரஜினிகாந்தை நினைத்து அவரது காதலியும் இளவரசியுமான தீபிகா படுகோனே அழுது பாடுவது போன்று இந்தப் பாடல் அமைந்துள்ளது.

ரஜினிகாந்த், தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் ‘கோச்சடையான்’. இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில், ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியிருக்கிறார். ‘போட்டோ ரியலிஸ்டிக் பெர்பாமன்ஸ் கேப்சரிங்’ என்ற நவீன தொழில்நுட்பத்தில் படம் உருவாகியுள்ளது. ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு லண்டன் பைன்வுட் ஸ்டுடியோவில் தொடங்கி திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. கோச்சடையான் குறித்து எத்தனையோ தகவல்கள் வந்தாலும் இப்போதைக்கு ரசிகர்களின் கேள்வி என்னவென்றால் படம் எப்போது வரும்? என்பதுதான்.

Comments