நாளைய முதல்வனே' வாசகத்துடன் விஜய் ரசிகர்கள் ஓட்டிய போஸ்டர்!!!

14th of August 2013
சென்னை::ஓசூர்; ஓசூரில், "நாளைய முதல்வனே' என்ற வாசகத்துடன், விஜய் ரசிகர்கள் நோட்டீஸ் ஓட்டியுள்ளனர். நடிகர் விஜய் நடித்த, "தலைவா' திரைப்படத்தை வெளியிடக் கூடாது என, திரையங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனால், "தலைவா' படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.
கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் மட்டும் படம் திரையிடப்பட்டுள்ளது. தமிழக ரசிகர்கள், அந்த படத்தை பார்க்க அம்மாநிலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஓசூர் நகரில் விஜய் ரசிகர்கள், "நாளைய முதல்வனே' என, போஸ்டர் ஓட்டி உள்ளனர். அந்த போஸ்டரில், "நேற்று இளைய தளபதி, இன்று தலைவா, நாளைய முதல்வனே' என, குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே, "தலைவா' படத்தை வெளியிட முடியாத கவலையில் நடிகர் விஜய் தரப்பினர் உள்ளனர். "தலைவா'படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்கள் இருப்பதால் ஆளும்கட்சி விஜய் நடித்த, "தலைவா' படத்தை வெளியிட ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது, அவரது ரசிகர்கள், நடிகர் விஜயை, "நாளைய முதல்வனே' என குறிப்பிட்டு போஸ்டர் ஓட்டியுள்ளனர். உளவுத்துறை போலீஸார், போஸ்டர் ஓட்டிய நபர்கள், போஸ்டரில் குறிப்பிட்ட வாசகங்களை சேகரித்து, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

திருட்டு, "சிடி': "தலைவா' திருட்டு "சிடி'க்கள் வீதிக்கு, வீதி விற்பனைக்கு வந்துள்ளன. கர்நாடகா மாநிலம், பெங்களூரு, சர்ஜாபுரம், அத்திப்பள்ளி, ஆணைக்கல் நகரங்களில் "தலைவா' படத்தை, "சிடி' கடை உரிமையாளர்கள் "கூவி, கூவி' விற்பனை செய்கின்றனர். அதனால், பெங்களூரு, ஆணைக்கல், அத்திப்பள்ளி செல்லும் தமிழகத்தை சேர்ந்தவர்கள், "தலைவா' திருட்டு "சிடி'க்களை வாங்கி வந்து, தமிழகத்தில் திரையிடுவதற்கு முன் அந்த படத்தை பார்த்து வருகின்றனர். ஓசூர் பகுதியில், "தலைவா' திருட்டு, "சிடி' விற்பனைக்கு வந்துள்ளது.

Comments