இன்டர்நெட்டில் என் பெயரில் மோசடி: நடிகர் கார்த்தி ஆவேசம்!!!

21st of August 2013
சென்னை::இன்டர்நெட்டில் தனது பெயரில் மோசடிகள் நடப்பதாக நடிகர் கார்த்தி கூறினார். பிரியாணி பாடல்களை திருடி நெட்டில் யாரோ வெளியிட்டு விட்டதாக சமீபத்தில் தான் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு போய் புகார் அளித்து விட்டு வந்தார். தற்போது சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரிலும் தனது பெயரில் போலி அக்கவுண்ட்கள் துவங்கப்பட்டு உள்ளதாக வருத்தப்பட்டார்.

நான் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எதிலும் இல்லை. ஆனாலும் என் பெயரில் நிறைய போலி அக்கவுண்ட்கள் உள்ளன. இந்த போலிகளை நம்பி ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பதாகவும் ரசிகர் ஒருவர் மூலம் தெரிய வந்தது. இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அகரம் போன்ற அமைப்புகளுக்கு நான் நிதி திரட்டும் பணிகள் எதையும் செய்யவில்லை. யாரோ என் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செய்வது தெரிகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கார்த்தி கூறினார்.

பிரியாணி படத்தின் பாடல்களை வருகிற 31–ந்தேதி விழா நடத்தி வெளியிட கார்த்தியும், டைரக்டர் வெங்கட்பிரபுவும் திட்டமிட்டனர். ஆனால் பாடல்கள் இன்டர்நெட்டில் வெளியாகி விட்டதால் இன்றே பாடல் சி.டி.க்கள் கடைகளில் விற்பனைக்கு வந்தன.

Comments