மீனா, 2 மலையாள படங்களில் அம்மாவாக அவதாரம் எடுத்துள்ளார்!!!

28th of August 2013
சென்னை::நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான 'நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகை மீனா.

அதன் பின்னர், 45க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய மீனா, 'சீதா ராமையா காரி மனவரலு' என்ற தெலுங்கு படத்தில் நடிகர் நாகேஸ்வர ராவின் பருவ வயது பேத்தியாக 1991ல் அறிமுகமானார்.

'ஒரு புதிய கதை'யின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தென்னிந்திய மொழிகளின் முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாக பல படங்களில் பிரகாசித்துள்ளார்.

கடைசியாக வெளியான 'ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கரர்' தெலுங்கு படத்தில் பார்வதி வேடம் ஏற்று நடித்த மீனா, 2 மலையாள படங்களில் அம்மாவாக அவதாரம் எடுத்துள்ளார்.

பிரபல மலையாள நாவலாசிரியர் வைக்கம் பஷீர் எழுதிய 'பால்யகால சகி' என்ற நாவல் அதே பெயரில் 1967ம் ஆண்டு மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்தது.

சிறுவயதிலிருந்தே காதலித்து வந்த ஒரு ஜோடியை சுற்றி பிண்ணப்பட்ட இந்த கதையின் நாயகன் மஜீத் ஆக பிரேம் நசீரும், நாயகி சுஹ்ராவாக ஷீலாவும் நடித்திருந்தனர்.

அதே கதைக்களம் - அதே 'பால்யகால சகி' என்ற பெயர் என தற்கால சூழலுக்கேற்ப உருவாக்கப்படும் மலையாள படத்தில் மஜீத் ஆக மம்முட்டியும், சுஹ்ராவாக இஷா தல்வாரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மூலம் மம்முட்டியின் அம்மாவாக மீனா மலையாள திரையுலகில் தற்போது மறுப் பிரவேசம் செய்கிறார்.

மோகன்லாலுடன் கடைசியாக 2005ல் வெளியான 'உடயநனு தாரம்' படத்தில் ஜோடியாக நடித்த அவர், தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'திரிஷ்யம்' படத்திலும் 2 குழந்தைகளின் பாசமான அம்மாவாக நடிக்கிறார்.

இந்த 2 படங்களும் வெளியான பிறகு கோலிவுட்டில் மீனா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments