ரீமேக் ஆகிறது 'மன்மதலீலை'!!!

1st of July 2013
சென்னை::இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய 'தில்லுமுல்லு' படத்தைத் தொடர்ந்து, அவருடைய 'மன்மதலீலை'யும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, மாதவி, தேங்காய் சீனிவாசன் நடித்த படம் 'தில்லுமுல்லு.' 1981-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை 'மிர்ச்சி' சிவா, இஷா தல்வார், பிரகாஷ்ராஜ் நடிக்க, ரீமேக் பண்ணியிருந்தார் பத்ரி.

இந்தப் படம் ஓரளவு வெற்றி பெற்றதை அடுத்து, கமல், ஜெயப்பிரதா நடித்த 'மன்மதலீலை'யும் ரீமேக் செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். இந்தப் படத்தையும் பத்ரியே இயக்கப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.

பழைய 'தில்லுமுல்லு' படத்தின் கருவை எடுத்துக்கொண்டு இந்த காலகட்டத்திற்கு ஏற்ப இயக்கினார் பத்ரி. அதைப்போலவே நவீன காலத்தில் பெண்களின் கற்புடன் விளையாடும் இளைஞன் எப்படி இருப்பான் என்பதை தைரியமாகச் சொல்ல இருக்கிறாராம்.

பழைய 'மன்மதலீலை'யில் இடம்பெற்ற 'மனைவி அமைவதெல்லாம்', 'ஹலோ மைடியர் ராங் நம்பர்' பாடல்களையும் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்த உள்ளாராம்.

புதிய 'தில்லுமுல்லு' என்னதான் ஓரளவுக்கு ஓடினாலும், பழைய 'தில்லுமுல்லு' போல இல்லை என்பது தான் ரசிகர்களின் குற்றச்சாட்டு. 'மன்மதலீலை'யாவது பழைய படத்துக்கு நிகராக எடுப்பார்களா என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Comments