ஏ.ஆர். ரகுமானிடம் செல்ல எட்டு வருடம் ஆனது – ஏ.ஆர்.முருகதாஸ்!!!

2nd of July 2013
சென்னை::பைன் போக்கஸ் பட நிறுவனம் சார்பாக ஆஜூ மற்றும் சௌந்தர்ராஜன் தயாரிப்பில், ‘சில்லுன்னு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, ஷிவதா நடிக்கும் படம் ‘நெடுஞ்சாலை’.
சத்யா இசையமைக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில்  நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர்  

ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு முதல் பாடல் சிடியை வெளியிட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார்.
 
விழாவில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பேசும் போது கூறியதாவது,
“நான் 1990களில் உதவி இயக்குனராக இருந்த போது டாக்டர் சுப்பராயன் நகரில் தங்குவதற்கு அறை தேடினேன். அப்போ அங்கு பேச்சுலருக்கு இடம் கிடைக்கவே இல்லை. இருந்தாலும் அங்கு அறை எடுத்து தங்கினேன். அதற்கு காரணம் அங்கு ரகுமான் சாரோட ரெக்கார்டிங் ஸ்டுடியோ இருந்தது.
என் அறையின் மொட்டை மாடியில் நின்று பார்த்தால் ரகுமான் சாரின் ஸ்டுடியோ தெரியும். இரவில் சுப்பராயன் நகரே இருட்டில் கருப்பாக இருந்தாலும், அவரது ஸ்டுடியோ மட்டும் வெளிச்சத்தில் பளிச்சுன்னு தெரியும். இப்போது எந்த படத்துக்கு பாடல் வேலை நடக்குது என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.
அங்கிருந்து அவரிடம் சென்று கம்போஸ் பண்ண எட்டு வருஷம் எனக்கு ஆனது. அவரிடம் ஒரு படம் பண்ணினேன். அந்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம்.
 
நான் வெளி இடங்களுக்கு செல்லும் போது ரகுமான் சார் ஊரில் இருந்து வருகிறேன் என்பேன். அந்த அளவுக்கு ரகுமான் சார் புகழ் பெற்றவர். சத்யா அவரை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு வரணும்.
இயக்குனர் கிருஷ்ணாவும் நிறைய போராடி வந்திருக்கிறார். போராட்டம் கஷ்டமானது. நிறுத்தத்தை தாண்டி பஸ் நிக்கும் போது, பஸ்ஸ பிடிக்க ஒருவன் ஓடுவான். அந்த பஸ் புறப்பட்டுச்சுன்னா அவன் பின்னாலே ஓடிப்போய் துரத்தி பிடிச்சி பஸ்ல ஏறுவான். அவன் பஸ்ஸை பிடிக்க வேண்டும் என்று அங்கு நிற்பவர்கள் நினைப்பார்கள். அது மாதிரி கிருஷ்ணாவை நான் பார்க்கிறேன். இந்த நெடுஞ்சாலையை பிடிச்சி  அவர் வேகமா போகணும். என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
 
பின்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது.
“தயாரிப்பாளர் தாணு சார் மூலமாக எனக்கு இயக்குனர் கிருஷ்ணா அறிமுகமானார். அவர் கதை சொல்லும் பொது எமோஷனாக சொல்வார். அது எனக்கு பிடித்திருந்தது.
 
பெரிய நடிகர்களின் படத்தை போல இந்த ‘நெடுஞ்சாலை’ படத்தை குவாலிட்டியா பெரிய புராஜக்டா எடுத்திருக்கிறார். படம் பண்ணினால் குவாலிட்டியா பண்ணனும்.
இப்போது ரெண்டு, மூணு படம் பேசிக்கிட்டு இருக்கேன். இந்தியில் பத்து படம் தயாராக இருந்தாலும் புதுசா குவாலிட்டியா படம் இருந்தால்தான் போறேன். இந்த படத்துல கடுமையான உழைப்பு தெரிகிறது,” என்றார்.
விழாவில் இயக்குனர் கே. பாக்யராஜ், பிரபுசாலமன், சமுத்திரகனி, ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், தாமிரா, நடிகை காயத்ரி மற்றும் தயாரிப்பாளர் சுவாமிநாதன், ‘சாட்டை’ தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் மற்றும் ஜெர்ரி, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
 
ஒளிப்பதிவாளர் ஜீவன், ராஜ்வேல் ஒலிவீரன், கலை இயக்குனர் சந்தானம், பாடலாசிரியர்கள் மணி அமுதவன், கார்த்திக் நேத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்த அனைவரையும் மக்கள் தொடர்பாளர் மௌனம் ரவி வரவேற்றார்.

Comments