விளம்பரங்களுக்கான விருது : தென்னிந்தியாவில் முதல் முறையாக வழங்கப்படுகிறது!!!

5th of July 2013
சென்னை::பல்வேறு விருது வழங்கும் விழாக்கள் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் நடைபெற்று வந்தாலும், ஒரு சில நொடிகள் ஓடக்கூடிய விளம்பரப்படங்களுக்கு என்று பிரத்யேகமான விருது வழங்கம் விழா சென்னையில் நடைபெற உள்ளது.

விளம்பரப் படங்களுக்கு விருது வழங்கும் விழாக்கள் வெளிநாடுகளில் சாதரணமான ஒன்று தான் என்றாலும், தென்னிந்தியாவில் இதுபொன்ற விளம்பரங்களுக்கான விருது வழங்கும் விழா இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

'எடிசன் சினிமா விருதுகள்' என்ற விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கி வரும் செல்வகுமார் என்பவர் தான், இந்த விருதை உருவாக்கியுள்ளார். இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ள இவ்விருது வழங்கும் விழா இனி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெறும்.

தொலைக்காட்சிகளில் இன்றைக்கு நிகழ்ச்சிகளை விட மிக சுவாரஸ்யமாகத் திகழ்வது விளம்பரங்களே. காரணம், நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும் விளம்பர இடைவெளியில் பார்வையாளர்கள் வேறு சேனல்களுக்கு தாவிவிடாத அளவுக்கு சுவாரஸ்யமாக விளம்பரங்களைத் தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த விளம்பரங்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து 'டி.இ.ஏ'(TEA) அதாவது தாமஸ் எடிசன் அட்வர்டைஸ்மெண்ட் (Thomas Edison Advertisement Award) விருதினை வழங்குகிறது ஜெசெல்வகுமாரின் எடிசன் விருது நிறுவனம்.

சிறந்த விளம்பரங்களுக்கான TEA 2013 விருது குறித்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் லோகோ அறிமுகம் நேற்று (ஜூலை 3) சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஷெல்ட்டர் ஹோட்டலில் நடந்தது.

இந்தியாவுக்கான மலேசிய தூதர் சித்ரா தேவி ராமையா, நடிகைகள் வரலட்சுமி, காதல் சரண்யா, அர்ச்சனா, நடிகர் வின்சென்ட் அசோகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, TEA 2013 லோகோவை அறிமுகப்படுத்தினர்.

விளம்பரங்களைத் தேர்வு செய்வதற்கான ஆன்லைன் வாக்களிப்பை நடிகர் வின்சென்ட் அசோகன் தொடங்கி வைத்தார். www.edisonawards.in என்ற இணைய தளத்தில் பொதுமக்களும் தங்களுக்குப் பிடித்த விளம்பரங்கள் மற்றும் அதில் நடித்தவர்களுக்கு வாக்களிக்கலாம்.

Comments