16th of July 2013
சென்னை::ஒரு படம் வெற்றியடையும் போது, அந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோவை ‘சூப்பர் ஸ்டார்’ என்று புகழ்வது கொஞ்ச நாளாக இல்லாமல் இருந்தது.
அது இப்போது மீண்டும் தலையெடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த ‘சிங்கம் 2’ படத்தின் வெற்றிச் சந்திப்பில் சூர்யாவை, விஜயகுமார் ‘அடுத்த சூப்பர்ஸ்டார்’ என வாயாரா புகழ்ந்து தள்ளி விட்டார்.
சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர் மட்டுமே, அவர் ரஜினிகாந்த் என்பது திரையுலகத்தினர் மட்டுமல்ல, பொதுவான பல ரசிகர்களும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயம்.
சில வருடங்களுக்கு முன் விஜய்யை கூட இப்படித்தான் சிலர் அழைக்கப் போக, விஜய்யே வலிய வந்து சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்றார்.
‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் சாதாரணமாக வந்து விட முடியாது. 80களில் இருந்து இன்று வரை ரஜினிகாந்த் நடித்த ஓரிரு படங்களைத் தவிர அனைத்துப் படங்களுமே வசூல் ரீதியாகவும் சரி, மக்களைக் கவர்ந்த விதத்திலும் சரி என்றுமே சோடை போனதில்லை. அதனால்தான் அவரை அப்படி அழைக்கிறார்கள்.
எந்த விதமான சினிமா பின்புலமும் இல்லாமல், தனது சொந்த முயற்சியால், திரைப்படத்தில் நடித்து, ஹீரோவாக உயர்ந்து, படிப்படியாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்து அனைவரின் மனதிலும் இடம் பெற்றவர் ரஜினிகாந்த். ஏறக்குறைய 40 வருடங்களாக அவரது இடத்தைத் தொட முயற்சித்து தோற்றுப் போனவர்களே அதிகம்.
சூர்யாவின் முந்தைய இரண்டு படங்கள் வியாபார ரீதியிலும் சரி, மக்களைக் கவர்ந்த விதத்திலும் சரி, அவை தோல்விப் படங்களே. அது மட்டுமல்ல, சூர்யா நடித்து இதுவரை மாபெரும் வெற்றி பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர் ஒரு சிறந்த நடிகர்தான். ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ஏற்கக்கூடிய அளவிற்கு அவர் இன்னும் மகத்தான பல சாதனைகளைச் செய்ய வேண்டும்.
அதுவரை இது போன்ற விஜயகுமார்களிடமிருந்து , சூர்யா விலகியிருப்பது நல்லது.
இனி பாராட்டுக்குக் கூட யாரும் அந்த வார்த்தையை பயன்படுத்தாமலிருப்பது நல்லது. மக்கள் திலகம் என்றால் எம்ஜிஆர், நடிகர் திலகம் என்றால் சிவாஜிகணேசன், சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த், உலக நாயகன் என்றால் கமல்ஹாசன், இசைஞானி என்றால் இளையராஜா, இசைப் புயல் என்றால் ஏஆர் ரகுமான் மட்டுமே.
உங்களுக்கு ‘பட்டங்கள்’ அவசியம் வேண்டும் என்றால் ஏதாவது பட்டங்களைப் போட்டுக் கொள்ளுங்கள். மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்திருப்பவர்களின் பட்டங்களுக்கு ஆசைப்படாதீர்கள்.
பட்டமும், பதவியும் தானாகத் தேடி வரவேண்டும். நாமாக போட்டுக் கொண்டால் அதற்குப் பெயர் வேறு.
-கவி
Comments
Post a Comment