தயாரிப்பாளரை அடிப்பேன் என்று மிரட்டிய நடிகர்!!!

Sunday,9th of June 2013
சென்னை::மறுபடியும் ஒரு காதல்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் வாசு பாஸ்கர் ஒரு  நடிகர் தன்னை ஆளை வைத்து அடிப்பதாக பேசியதையடுத்து ‘வருச நாடு’ இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
 
சரத்குமார் நடித்த ‘மாயி’ படத்தை டைரக்டு செய்தவர், சூர்ய பிரகாஷ். இவர் இப்போது, ‘வருசநாடு’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பாடல்களை, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளியிட, பொதுச்செயலாளர் ராதாரவி பெற்றுக்கொண்டார்.
 
விழாவில், நகைச்சுவை நடிகர் மயில்சாமி பேசும்போது, ‘‘நன்கொடை கொடுப்பவர்களை எல்லாம் பெரிய மனிதன் என்று நினைத்து, நடிகர் சங்கத்தில் முன் வரிசைக்கு கொண்டு வராதீர்கள். அப்படி வருகிறவர்கள் யார், என்ன? என்று விசாரித்து உறுப்பினர் ஆக்குங்கள். இல்லையென்றால், கம்பி எண்ணக் கூடியவர்களை எல்லாம் உறுப்பினர் ஆக்கி விட்டோமே என்று வருத்தப்பட வேண்டியிருக்கும்’’ என்றார்.
 
பட அதிபர் வாசு பாஸ்கர் பேசும்போது, ‘‘இந்த விழாவுக்கு நட்பு அடிப்படையில் சரத்குமார், ராதாரவி உள்பட எல்லோரும் வந்திருக்கிறார்கள். ஆனால், எனது படத்தில் நடித்த ஒரு நடிகர், அந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு வர வேண்டுமென்றால், 25 லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று அடாவடி செய்தார். இது நியாயமா? என்று கேட்டதற்கு, ஆளை வைத்து அடிப்பேன் என்று மிரட்டினார். இத்தனைக்கும் அந்த நடிகர் நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவர்’’ என்று கூறினார்.
 
நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பேசும்போது, வாசு பாஸ்கரின் குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட்டார். ‘‘இப்படி ஒட்டு மொத்தமாக பொதுவில் ஒரு நடிகர் என்று கூறக்கூடாது. அந்த நடிகரின் பெயரை சொல்லுங்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றார். ‘‘மொழி தெரியாத நடிகர்–நடிகைகளை படத்தில் நடிக்க வைக்காதீர்கள். நல்ல தமிழ் பேச தெரிந்த நடிகர்–நடிகைகளை நடிக்க வையுங்கள்’’ என்று அவர் பட அதிபர்களை கேட்டுக்கொண்டார்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசும்போது, ‘‘நாம் ஒற்றுமையாக இருப்போம். ஒற்றுமைதான் வாழ வைக்கும். எந்த பிரச்சினை என்றாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்’’ என்று கூறினார்.
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் டி.சிவா, செயலாளர் பி.எல்.தேனப்பன், பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், டைரக்டர்கள் விக்ரமன், எழில், கதிர், படத்தின் கதாநாயகன் குமரன், நடிகர்–டைரக்டர் தருண்கோபி, ராஜ்கபூர், சிங்கம்புலி, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, படத்தின் இசையமைப்பாளர் யத்தீஷ் மகாதேவ் ஞானம் ஆகியோரும் வாழ்த்தி பேசினார்கள்.
டைரக்டர் சூர்ய பிரகாஷ் வரவேற்று பேசினார். பட அதிபர் ஆர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.

Comments