நடிகை காஜல் அகர்வால் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி!

19th of June 2013
சென்னை::தமிழில், பாரதிராஜாவின் “பொம்மலாட்டம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால், ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் சரியாக போகாததால் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்ககட்டப்பட்டார். பின்னர் தெலுங்கில் அவர் மஹதீரா படம் சூப்பர் ஹிட்டாக அனைவரது பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழில் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்தார். அந்தப்படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் சேர மீண்டும் விஜய்யுடன் தற்போது ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ…
 
* சினிமாவுக்கு வந்தது எப்படி?
 
மாடலிங் துறையில், எனக்கு ஆர்வம் அதிகம். இதனால், அதில் ஈடுபட்டேன். பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்தேன். அதன் மூலம், “லட்சுமி கல்யாணம் என்ற, தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. 2008ல், பாரதிராஜா இயக்கத்தில், “பொம்மலாட்டம் படத்தின் மூலமாக, தமிழில்அறிமுகமானேன். ஒன்பது ஆண்டுகளில், 30 படங்களில் நடித்து விட்டேன். இதில், பெரும்பாலான படங்களில், முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடியுள்ளேன் என்பது, பெருமைக்குரிய விஷயம்.
 
* முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே, ஜோடியாக நடிக்கிறீர்களே?

நடிக்க வந்த புதிதில், நானும், வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிக்கத் தான் செய்தேன். தற்போது எனக்கென, தனியாக மார்க்கெட் உருவாகியுள்ளது. இந்த நேரத்தில், புதுமுக நடிகர்களுடன் நடித்தால், மார்க்கெட்டை தக்க வைக்க முடியாது. என்னுடைய வீழ்ச்சிக்கு, நானே காரணமாக இருக்க விரும்பவில்லை.
 
* மீண்டும், விஜயுடன் நடிப்பது பற்றி?
 
ரொம்பவே, சந்தோஷமாக இருக்கிறது. இதுவரை, நான் ஜோடி சேர்ந்த நடிகர்களில், விஜய் குறிப்பிடத்தக்கவர். சக கலைஞர்களை மதிக்க கூடியவர். அமைதியானவர்; “துப்பாக்கி, ஜில்லா படங்களில் மட்டுமல்லாது, இன்னும் பல படங்களில், அவருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன். “ஜில்லாவில், எங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி, பேசப்படும் அளவில் இருக்கும்.
 
* தெலுங்கை விட, தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறீர்களாமே?
 
தமிழில் தொடர்ந்து கிடைக்கும் வெற்றி தான், இதற்கு காரணம். “துப்பாக்கி படத்தின் வெற்றி, என் மார்க்கெட்டை உயர்த்தி விட்டது. அதனால், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். தமிழில், சிம்ரன், ஜோதிகா போல், நானும் புகழ் பெற்ற நடிகையாவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
 
* வயது, 27 ஆகி விட்டது. திருமணம் எப்போது?
 
சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்குள், திருமணம் என்னும், அன்பு சிறைக்குள் அடைபட விரும்பவில்லை. பாலிவுட், ஹாலிவுட் நடிகைகள், பெரும்பாலும், 35 வயதிற்கு மேல் தான், திருமணம் செய்து கொள்கின்றனர். அப்படி பார்க்கும்போது, என் திருமணத்துக்கு, இன்னும் நேரம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Comments