சினிமாவில் போலித்தனம் ஒழிகிறது – வைரமுத்து பேச்சு!!!:-மார்க்கெட் சரிந்தால் இயக்குனர் ஆவேன்: அர்ஜுன் பேட்டி!!!

 Monday,10th of June 2013
சென்னை::அர்ஜுனின் தயாரிப்பு, இயக்கம் , நடிப்பில் ‘அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2’ படத்தின் துவக்க விழாவும், பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று, சென்னையில் நடைபெற்றது.
 
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து குத்துவிளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். விழாவில் அர்ஜுன், நாயகிகள் சுர்வீன் சாவ்லா, சார்லேட் கிளேர், இசையைமப்பாளர் ஹரி கிருஷ்ணா, ஒளிப்பதிவாளர் வேணுகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
விழாவில் வைரமுத்து பேசும் போது, “ தலைமுறை தாண்டி நிற்கிறவர் என்ற அடைமொழிக்கு முழு பொருத்தமானவர் அர்ஜுன் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன்.32 ஆண்டுகள், 150 படங்கள், 8 மாநில விருதுகள், சில படங்களை இயக்கியவர், இது சாதாரண விஷயமல்ல.
 
32 ஆண்டுகள் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு அர்ஜுன் அவர்களுடைய உழைப்பு, போராட்டம், எல்லாவற்றையும் விட நல்லெண்ணம், இவைகள் கூடித்தான் அவரை இந்த நீண்ட பயணத்திற்கு தயாரித்து வைத்திருக்கின்றன. இன்னும் ஒரு பயணத்திற்கு தயாரித்துக் கொண்டிருக்கின்றன என நான் நம்புகிறேன்.
 
அர்ஜுனிடம் இன்னும் வெறி குறையாமல் இருக்கிறது. “வெற்றிக்கும் வெறிக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம்”. இதை படத்தோட டயலாக்ல கூட நீங்க வச்சிக்கலாம்.  அர்ஜுனிடம் அதிக ஈடுபாடு உண்டு. அது அவருக்கு இன்னும் உயரத்தைக் கொடுக்கும்.
 
சினிமாவில் மிகை ஒழிகிறது. போலித்தனம் ஒழிகிறது. “வாங்க..வாங்க..வாங்க..’ என்பதெல்லாம் ஒழிகிறது. எது உண்மையோ அது மட்டும், எது நியாயமோ அது மட்டும், எது போதுமான உணர்ச்சியோ அது மட்டும், என்ற தலைமுறை வருகிறது.
 
எங்கு  அச்சம் இருக்கிறதோ, அங்கு பொய் வருகிறது. எங்கு அறியாமை இருக்கிறதோ அங்கு பொய் வரும். எங்கு அடிமைத்தனம் இருக்கிறதோ அங்கு பொய் வரும். இவை எதுவும் இல்லாத இடத்தில் பொய் வராது.
பொய்யற்ற தலைமுறை சினிமாவுக்குள் வருவதை நான் பார்க்கிறேன். இது ரொம்ப முக்கியம், ” என்றார்.
 
ஆம்…அதனால்தான் மதன் கார்க்கியும், யுவன்ஷங்கர் ராஜாவும் ‘பிரியாணி’ படத்தில் இணைந்து பணி புரிகிறார்கள் போலும்….

மார்க்கெட் சரிந்தால் இயக்குனர் ஆவேன்: அர்ஜுன் பேட்டி!!!  

அர்ஜுன் இயக்கி நடித்த படம் ஜெய் ஹிந்த். 20 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் 2ம் பாகம் இயக்கி, தயாரித்து நடிக்கிறார். இது பற்றி அர்ஜுன் கூறியது:

ஜெய்ஹிந்த் 2ம் பாகத்துக்கும் முதல்பாகத்துக்கும் சம்பந்தமில்லை. அப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தேன். 2ம் பாகத்தில் சராசரி ஒரு இந்திய பிரஜையாக நடிக்கிறேன். அவனது கண்ணோட்டத்தில் கல்வியின் தற்போதைய நிலை என்ன என்பதையும், அதற்கு என்ன தீர்வு என்பதையும் சொல்ல உள்ளேன்.

இந்தியாவில் 74 சதவீதம் பேர் அரசு பள்ளியில்தான் படிக்கிறார்கள். அவர்களுக்குள்ள பிரச்னைகள் எந்தெந்த வகையில் பாதிக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்து இக்கதை உருவாக்கப்பட்டது. சுர்வின் சாவ்லா, சார்லட் கிளார் ஹீரோயின்கள். மற்றும் பிரமானந்தம், செந்தில் உள்பட பலர் நடிக்கின்றனர். வைரமுத்து பாடல். ஹரிகிருஷ்ணா இசை. தயாரிப்பு, இயக்கம், ஹீரோ என 3 பொறுப்பு நான் ஏற்கிறேன்.

மார்க்கெட் இருக்கும்வரை ஹீரோவாக நடிப்பேன். எப்போதெல்லாம் மார்க்கெட் சரிகிறதோ அப்போது இயக்குனராகிவிடுவேன். இப்படத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், பத்திரிகை துறைக்கு சமர்ப்பிக்கிறேன்.                    

Comments