12th of June 2013
சென்னை::நடிகர் சிலம்பரசனும், நடிகை ஹன்சிகாவும் ‘வாலு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியிருப்பதாகவும், இரண்டு பேரும் ஒருவரையொருவர் ஆழ
மாக காதலித்து வருவதாகவும் பேசப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்தபின் ஹன்சிகாவை, சிலம்பரசன் தனது காரில் அழைத்து செல்வதாகவும், வெளியூர்களுக்கு செல்லும்போது ஹன்சிகாவை சிலம்பரசன் விமான நிலையம் வரை வந்து வழியனுப்புவதாகவும் தகவல்கள் கசிகின்றன.
நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சிலம்பரசன் அளித்த பதில்களும் வருமாறு:–
காதல்?
கேள்வி:– உங்களுக்கும், நடிகை ஹன்சிகாவுக்கும் ஆழமான காதல் இருந்து வருவதாக கூறப்படுகிறதே, அது உண்மையா?
பதில்:– எனக்கு இப்போது யாருடனும் காதல் இல்லை. காதல் இருந்தால், அதை வெளியே சொல்கிற தைரியம் எனக்கு உண்டு.
கேள்வி:– ஹன்சிகாவை விமான நிலையம் வரை சென்று நீங்கள் வழியனுப்புவதாக சொல்கிறார்களே?
பதில்:– கேட்பதற்கு, ‘காமெடி’யாக இருக்கிறது.
கேள்வி:– ஹன்சிகாவே நேரில் வந்து உங்களிடம் காதலை தெரிவித்தால், ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்:– ஹன்சிகா மட்டுமல்ல, எந்த பெண்ணாக இருந்தாலும் சரி, என்னுள் இருக்கும் ஆத்மா ‘சரி’ என்று சொன்னால், ஏற்றுக்கொள்வேன். சமீபகாலமாக மனதளவில் நான் பக்குவப்பட்டு விட்டேன். மண்டையும், மூளையும் சொல்வதை கேட்பதில்லை. உள்ளுக்குள் இருக்கும் ஆத்மா சொல்கிறபடி நடக்கிறேன்.எனக்கு நீங்கள் போன் செய்திருந்தீர்கள். உங்கள் ‘மிஸ்டு கால்’ஐ பார்த்தேன். பதிலுக்கு போன் பண்ணு என்று என் ஆத்மா சொன்னதால், பேசிக்கொண்டிருக்கிறேன்.
புது வீடு
கேள்வி:– புது வீடு கட்டியிருக்கிறீர்களாமே..?
பதில்:– ஆமாம். புதுமனை புகுவிழா முடிந்து விட்டது. முதன்முதலாக அந்த வீட்டுக்கு என் நண்பர்களை எல்லாம் அழைத்து இருக்கிறேன்.
கேள்வி:– ஹன்சிகாவையும் அழைத்து இருக்கிறீர்களா?
பதில்:– நண்பர்கள் எல்லோரையும் அழைத்து இருக்கிறேன்.
திருமணம்:
கேள்வி:– சரி, உங்கள் திருமணம் எப்போது?
பதில்:– எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. நான் சமீபகாலமாக எதையும் திட்டமிடுவதில்லை.
கேள்வி:– நீங்கள் சாமியார் ஆகிவிட்டதாக சிலர் சொல்கிறார்களே?
பதில்:– ஆன்மிகத்துக்கு போனால், சாமியார் ஆகிவிட வேண்டுமா என்ன? நான் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பது உண்மை. ஆனால், சாமியார் ஆகவில்லை. ஒருவேளை நான் சாமியார் ஆக வேண்டும் என்று விதியிருந்தால், அப்படி நடந்துவிட்டுப் போகட்டும்.
‘வாலு’
கேள்வி:– நீங்கள் நடிக்கும் வாலு, வேட்டை மன்னன் ஆகிய இரண்டு படங்களில் எந்த படம் முதலில் திரைக்கு வரும்?
பதில்:– ‘வாலு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் பாக்கி. அதை சீக்கிரமே முடித்து விடுவோம். அடுத்து அந்த படம்தான் திரைக்கு வரும்.’’
இவ்வாறு சிலம்பரசன் கூறினார்.
Comments
Post a Comment