நடிகை சமந்தாவுக்கு குழந்தை ஆசை!!!

17th of June 2013
சென்னை::வயது கூடிக்கொண்டே செல்வதால், தனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்து விட்டதாக தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா. 
தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீதானே என் பொன் வசந்தம் என சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் சமந்தா. காதல், கல்யாணம் என சமந்தாவையும், சித்தார்த்தையும் சேர்த்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தனக்கு குழந்தை ஆசை வந்து விட்டதாக ட்விட்டரில் கூறியிருக்கிறார் சமந்தா...

தற்போது தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. அதோடு அடுத்து தமிழுக்கும் என்ட்ரி ஆகிறார். இந்த நேரத்தில், சித்தார்த்துடன் அவரை இணைத்து காதல் மற்றும் கல்யாண செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், இதன்காரணமாக சமந்தாவின் சினிமா மார்க்கெட் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. எப்போதும் போலவே பிசியாக, ஜாலியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், தனது டுவிட்டரில், தனக்கு அம்மாவாகும் ஆசை வந்திருப்பதாக தெரிவித்துள்ளார் சமந்தா. அந்த ஆசை ஏற்பட்டதற்கான காரணத்தை அவர் கூறும்போது, நான் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் இருந்தபோது அங்கு ஒருவர் தனது குழந்தையை கொண்டு வந்திருந்தார். என்னைப்பார்த்ததும் அந்த குழந்தை பூவாக சிரித்தது. அதோடு என்னிடம் தாவி வந்து உட்கார்ந்து கொண்டது. பெற்றோர் அழைத்தும் என்னை விட்டு செல்ல அடம்பிடித்தது. அந்த குழந்தை எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது. சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை என்னை விட்டு பிரிந்து சென்றாலும், அதன் முகமும் சிரிப்பும் என் மனதை விட்டு விலகாமல் நிற்கிறது.

அதோடு, எனக்குள்ளும் தாய்மை ஊற்றெடுக்க அந்த குழந்தை காரணமாகி விட்டது. அதன்பிறகுதான் எனக்கும் கல்யாண வயதாகி விட்டது. அம்மாவாகும் வயதாகி விட்டது என்பதை உணரத் தொடங்கியிருக்கிறேன். சீக்கிரமே அம்மாவாக வேண்டும் போல் உள்ளது என்றும் தனது மனதில் உள்ள தாய்மை உணர்வை மடைதிறந்தார் போல் கொட்டியிருக்கிறார் சமந்தா.

Comments