கோச்சடையான் படத்துக்கு சூப்பர் ஸ்டாரே போட்ட தடா!!!

14th of June 2013
சென்னை::எந்திரன்’ படம் வெளிவந்து 3 ஆண்டுகளாகியும், சூப்பர் ஸ்டாரின் படம் ஒன்றும் வெளிவராத நிலையில், சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அவர் நடித்து வெளிவரவிருக்கும் ’கோச்சடையான்’ ரிலீஸ் தேதியை அறிவிக்க சொல்லி, அன்புத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். அவரும் என்னென்னவோ காரணங்கள் சொல்லியும், ரசிகர்களின் நச்சரிப்பு குறைந்த பாடில்லை.

சூப்பர் ஸ்டார் இயல்பாகவே செண்டிமெண்ட் பார்க்கக் கூடியவர். ’ஜக்குபாய்’ படம் முதலில் அவர் நடிக்க ஆரம்பித்த போது, நிறைய தடைகள் வரவே, அப்படத்தை டிராப் செய்துவிட்டார். அவர் தடையாக நினைத்தது போலவே, சரத்குமார் ஜக்குபாயில் நடித்தபோது, அப்படம் ரிலீஸூக்கு முன்னாடியே திருட்டு விசிடியில் வெளியாகி, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் ’ராணா’ பட பூஜை அன்றே, எவருமே எதிர்பார்க்காதபடி சூப்பர் ஸ்டார் மயக்கம் போட்டு விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமடைந்தார். அதைத் தொடர்ந்து, மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரிலுள்ள மௌண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு, முழு உடல் தகுதியுடன் இன்னும் பிரகாசமாக ஜொலித்தார். உலகம் முழுக்க வாழும் தன்னுடைய ரசிகர்களின் ஆத்மார்த்தமான வேண்டுதல்களே தான் மீண்டுவரக் காரணம் என்றார் சூப்பர் ஸ்டார். இந்நிலையில் தன் ரசிகர்களுக்காக ’கோச்சடையான்’ படத்தை மோஷன் கேப்ச்சர் என்ற அதிநவீன தொழில் நுட்பத்தில் முழுவீச்சில் நடித்து முடித்துக் கொடுத்தார்.

’கோச்சடையான்’ ஒரு வரலாற்றுக் காவியம். அதேபோல் சூப்பர் ஸ்டாரின் நீண்ட நாள் கனவுதான் இந்த கோச்சடையான். இன்றைய சூழலில் வரலாற்று திரைப்படங்கள் வெற்றி பெறுமா? என்ற சிறிய சந்தேகம் வரவே, திரைக்கதையை வடிவமைக்க இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை தன்னுடன் இணைத்துக் கொண்டார் சூப்பர் ஸ்டார். கே.எஸ்.ரவிக்குமார் என்னதான் ஒரு வெற்றி பட இயக்குனராக இருந்தாலும், கோச்சடையான் படத்தை பொறுத்தவரை அவர் ஒரு மேற்பார்வையாளர் மட்டுமே. இயக்குனர் அல்ல. அதேபோல் அவருக்கும் இந்தத் தொழில்நுட்ப அனுபவமும் புதுசு. அதனால் ஓரளவுக்குத் தான், அவர் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் அவர் செய்த ஒரே நல்ல விஷயம். சூப்பர் ஸ்டாருடன் நெருங்கி பணியாற்ற கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சிறந்த கதையை அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கிவிட்டார். அக்கதையை சூப்பர் ஸ்டாரிடம் சொல்லி அனுமதி பெறும் தருணத்தை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்.

அவருடைய நல்ல நேரம், சமீபத்தில் அவரைச் சந்தித்த சூப்பர் ஸ்டார் கோச்சடையான் படத்தின் டப்பிங் முடிந்த நிலையில், தான் எதிர்பார்த்த படி கோச்சடையான் வரவில்லை. இந்தப் படம் எந்திரன் படத்தின் வியாபாரத்தை முறியடிக்குமா? என்று தான் அச்சம் கொண்டுள்ளதாகக் கூறினார்.

கே.எஸ்.ரவிக்குமார் எவ்வளவு எடுத்துக் கூறியும், மனம் மாறாத சூப்பர் ஸ்டாரிடம் அப்படி ஏதேனும் நிகழ்ந்தால், உங்கள் மார்க்கெட்டை தூக்கி உயர்த்தும் வண்ணம் என்னிடம் ஒரு கதையிருக்கிறது என்று சொல்ல, உடனே உற்சாகமடைந்த சூப்பர் ஸ்டார் கதையைக் கூறும் படி கேட்க, தக்க தருணத்தை எதிர்பார்த்த கே.எஸ்.ரவிக்குமார் கதையைக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு பரவசமடைந்த சூப்பர் ஸ்டார் கோச்சடையான் படத்தை பிறகு ரிலீஸ் செய்யலாம். இந்தப் படத்தை ஆரம்பித்து விடலாமென்று யோசனை சொல்ல, அதிர்ச்சியடைந்தார் ரவிக்குமார். கோச்சடையான் படத்துக்கு சூப்பர் ஸ்டாரே போட்ட தடா, பொறுத்திருந்து பார்ப்போம்…! முந்தப் போவது கோச்சடையானா? இல்லை கே.எஸ்.ரவிக்குமாரா? எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்…!

Comments