புகழுக்கு ஆசைப்பட்டு வருபவர்கள் சினிமாவில் ஜெயிக்க முடியாது - விஷால்!!!

28th of June 2013
சென்னை::சினிமாவிற்கு வந்த துவக்கத்திலேயே அதிரடி படங்களாக கொடுத்து, அதுவும் ஹாட்ரிக் ஹிட் படங்களாக தந்து அசத்தியவர் நடிகர் விஷால். அவன் இவன், வெடி, சமர்  படங்களின் சறுக்கலுக்கு பின்னர் தனது அடுத்தடுத்த படங்களை ரொம்ப கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஷால். தற்போது மதகஜராஜா, பட்டத்து யானை, பாண்டியநாடு படங்களில் நடித்து வரும் விஷால், பட்டத்து யானை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* உங்களுக்கு யார் போட்டி?

சினிமாவில் ஜெயிப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். ஜெயித்தவர்கள், அதை தக்க வைத்து கொள்வது, அதை விட கஷ்டமான காரியம். எல்லா பிரச்னையையும் சமாளித்து, தொடர்ந்து முன்னணியில் நிற்பவர்களை பார்த்தால், அவர்களது தனித்தன்மை தெரியும். யாரையும் போட்டியாக நினைப்பதை விட, போட்டியை சமாளிப்பதற்கு, எப்படி நடந்து கொள்ளலாம் என,யோசிப்பது தான், நல்ல முடிவு.

* புதுசு, புதுசா நிறைய பேர் வர்றாங்களே?

சினிமாவுக்கு யார் வரணும்; யார் வரக்கூடாதுன்னு, கட்டுப்பாடு போட முடியாது. யார் வேண்டுமானாலும் வரலாம். திறமை உள்ளவர்கள், கடினமாக உழைப்பவர்கள், ரசிகர்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமாக யோசிப்பவர்கள் தான், நிற்க முடியும். புகழுக்கு ஆசைப்பட்டு வருபவர்கள், வெற்றிக்கனியை பறிப்பது, தற்போதைய நிலையில் சாத்தியமில்லை.

* "பட்டத்து யானையில் நடித்த அனுபவம்?

இந்த படத்தின் கதை, எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இயக்குனர், என்னிடம் கதை கூறியபோது,  இடைவேளை வரை மட்டுமே கேட்டேன். மீதி கதையை கேட்பதற்கு முன், தயாரிப்பாளரிடம் பேசி, "இயக்குனர் பூபதிபாண்டியனை ஒப்பந்தம் செய்யுங்கள் என்றேன்.

* அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஜோடி பொருத்தம் எப்படி?

இந்த படத்துக்காக, அர்ஜுன் மகள், ஐஸ்வர்யாவை நடிக்க கேட்டதும், அவர் சம்மதித்தார். "புதிய ஹீரோயின் கிடைச்சாச்சு. எப்படி நடிப்பாரோ என்ற பயம் இருந்தது. ஆனால், அவர் எந்த பயமும் இல்லாமல், சர்வ சாதாரணமாக நடித்தார்.  தமிழ் சினிமாவுக்கு நல்ல ஹீரோயின் கிடைச்சிருக்காங்க. படம் வெளியானதும், இது, உங்களுக்கு புரியும்.

* சந்தானத்துடன்  கூட்டணி எப்படி?

இந்த படத்தின் இயக்குனரே, காமெடி வசனங்களை, நன்றாக எழுதக் கூடியவர் தான். "சந்தானம் காம்பினேசன் நல்லாயிருக்கும் என்றார். ஆனால், சந்தானம், ரொம்ப பிசியாக இருந்தார். ஆனாலும், நடிக்க அழைத்ததும், உடனே கால்ஷீட்  கொடுத்தார். சந்தானத்திற்கும், எனக்கும் நடக்கும் மோதல் காட்சிகளில் காமெடி தூள் பறக்கும்.

முழுக் கதையும் படமாக்கப்பட்டபோது, ரசித்து, ரசித்து நடித்தேன்.

Comments