மாயை’ பட பிரச்சனை – மாறி மாறி புகார்கள்!!!

19th of June 2013
சென்னை::சமீபத்தில் ஆடியோ வெளியீடு நடந்த படம் ‘மாயை’.  இந்த படத்தை கண்ணன் இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த படத்தை முதலில் ‘சை’ என்ற பெயரில் சென்னை புரொடெக்ஷன் பட நிறுவனம் சார்பில் எழில் இனியன் என்பவர் தயாரித்திருக்கிறார். படத்தை தயாரித்ததோடு, படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாகவும் நடித்திருந்தார் எழில்.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி இசைசேர்ப்பு முடிந்த நிலையில் திடீரென படத்தில் நடித்த ஹீரோயின் சரியாக நடிக்கவில்லை, எனவே ,வேறு ஹீரோயின் போட்டு புதிதாக காட்சிகளை சேர்க்கலாம் என இயக்குனர் கண்ணன் தயாரிப்பாளர் எழிலிடம் சொல்லியிருக்கிறார்.
ஹீரோயினாக ‘காதல்’ சந்தியாவை ஒப்பந்தம் செய்து ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த தேதியும் குறித்தார்கள். அந்த தேதியில் ஸ்பாட்டுக்கு வந்த சந்தியாவுக்கு படக்குழு தந்த காஸ்டியூம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
கவர்ச்சிகரமான குறைவான உடையை தந்ததால் அதை அணிய சந்தியா மறுத்துவிட்டார். அதோடு, படம் முழுக்க இப்படியே கவர்ச்சி உடை அணிய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த நிபந்தனையை ஏற்க மறுத்ததோடு, உடனடியாக படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறியிருக்கிறார் சந்தியா.
 
இதனால், அன்றைய படப்பிடிப்பு தடை பட தயாரிப்பாளர் எழிலுக்கும், இயக்குனர் கண்ணனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில், சந்தியாவுக்கு பதிலாக மீண்டும் வேறு ஹீரோயின் மாற்றி படத்தை மீண்டும் ஷுட் செய்வதற்கு இயக்குனர் வேறு சில நண்பர்கள் உதவியை நாடியிருக்கிறார்.
இதற்கு தயாரிப்பாளர் எழில் ஆட்சேபிக்க இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அதன்படி படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக தயாரிப்பாளர் எழில் இனியனுக்கு அவர் செலவு செய்த தொகையை திரும்ப தருவது என ஒப்புக்கொண்டார் இயக்குனர் கண்ணன்.
 
இந்த சூழலில், தனது பெயரையே தயாரிப்பாளர் என போட்டு ஆடியோ வெளியீடையும் முடித்துக் கொண்ட இயக்குனர் கண்ணன் ஒப்புக் கொண்டபடி தயாரிப்பாளர் எழிலுக்கு பணம் திரும்ப தராமல் இழுத்தடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து இயக்குனர் கண்ணன் மீது தயாரிப்பாளர் எழில் இனியன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். காதல் சந்தியா தன் பங்குக்கு ‘ஆபாச ஆடை கொடுத்து ஷுட்டிங்கில் நடிக்க சொன்னதாக இயக்குனர் டார்ச்சர்’ என  இயக்குனர் கண்ணன் மீது நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்.
 
அதோடு, தன் பெயரையோ, புகைப்படத்தையோ ‘மாயை’ படத்தின் விளம்பரங்களில் பயன்படுத்தக்கூடாது என இயக்குனர் கண்ணனுக்கு ‘காதல்’ சந்தியா கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
படத்தின் தயாரிப்பாளர் எழில் இனியன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்பதால் கோர்ட்டில் வழக்கு போட்டு படத்துக்கு தடை வாங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் .

Comments