நீங்கள் ஹீரோவாக நடிப்பதாக அறிவிப்பு வந்ததே! என்ன ஆயிற்று?: ஜி.வி.பிரகாஷிடம் கேளுங்கள்!!!

Sunday,2nd of June 2013
சென்னை::நீங்கள் ஹீரோவாக நடிப்பதாக அறிவிப்பு வந்ததே! என்ன ஆயிற்று?
தமிழ் மற்றும் இந்தியில் பல படங்களுக்கு இசையமைத்து வருவதாலும், ‘மதயானைக் கூட்டம்’ என்ற சொந்தப் படத்தின் பணிகளில் ஈடுபட்டிருப்பதாலும், நான் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை. ஆனால், ஹீரோவாக நடிப்பதற்கான பயிற்சிகளை முழுமையாகப் பெற்றுள்ளேன்.

தேனிலவு கொண்டாட எந்த நாட்டுக்கு செல்கிறீர்கள்?
ஜூன் 27ம் தேதி திருமணம் நடக்கிறது. எந்த நாட்டுக்கு ஹனிமூன் செல்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறீர்களா?
-ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ஜென்டில்மேன்’ படத்துக்காக, ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு...’ என்ற பாடலை என் சிறுவயதில் பாடியிருக்கிறேன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘அந்நியன்’, ‘உன்னாலே உன்னாலே’ ஆகிய படங்களில் பாடியுள்ளேன். எனது உதவியாளராக இருந்து, பிறகு இசையமைப்பாளராக மாறிய என்.ஆர்.ரகுநந்தன் இசையில், ‘நீர்ப்பறவை’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறேன்.

உங்களைப் பெரிதும் கவர்ந்த நடிகர்கள் யார்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஆக்டர் கமல்ஹாசன் தவிர, பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், அமீர்கான் ஆகியோரையும் எனக்குப் பிடிக்கும்.

நீங்களும், உங்கள் காதலி சைந்தவியும் இணைந்து பாடியிருக்கிறீர்களா?
‘தெய்வத்திருமகள்’ படத்தில் ‘விழிகளில் ஒரு வானவில்...’; ‘மயக்கம் என்ன...’ படத்தில் ‘பிறைதேடும்...’; ‘உதயம் என்.எச் 4’ படத்தில் ‘யாரோ இவன்...’; ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் ‘இவன் யாரோ...’ ஆகிய பாடல்களை சைந்தவியும், நானும் இணைந்து பாடியிருக்கிறோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவத்தை சொல்லுங்களேன்?
-பி.வாசு டைரக்ஷனில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘குசேலன்’ படத்துக்கு நான் இசையமைத்தேன். ஒருமுறை ரஜினி சாரை நேரில் பார்ப்பதற்காக, ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு சென்றிருந்தேன். அப்போது பாடல் காட்சியில் நடித்த அவரைப் பார்த்து ரசித்த நான், அருகில் சென்று பேசத் தயங்கினேன். இதை எப்படியோ கவனித்துவிட்ட அவர், என்னை அழைத்து தன்னருகே அமர வைத்து, நீண்ட நாள் நண்பர் போல் கலகலப்பாகப் பேசினார். போட்டோவுக்கு போஸும் கொடுத்தார். அவரது எளிமையும், அன்பும், அரவணைப்பும்தான் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது என்று, மற்றவர்கள் அவரைப் பற்றி சொல்வதை அன்றுதான் நான் மனப்பூர்வமாக உணர்ந்தேன்.

நீங்கள் ஏன் ரீமிக்ஸ் பாடல்களுக்கு இசையமைப்பது இல்லை?
‘தமிழ் சினிமாவில் ரீமிக்ஸ் பாடல்களுக்கு ஆயுள் குறைவு’ என்று, ஆரம்பகாலத்தில் இருந்தே நான் சொல்லி வருகிறேன். ஏற்கனவே உருவாகி, ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டுள்ள அந்தப் பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் சிதைக்கக்கூடாது என்பது என் வேண்டுகோள்.

நான் ஏராளமான பாடல்களும், கவிதைகளும் எழுதி வைத்திருக்கிறேன். உங்களிடம் வந்தால், சினிமாவில் பாட்டு எழுத வாய்ப்பு தருவீர்களா?
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால், கடுமையாக உழைக்க வேண்டும். முதலில் நீங்கள் எழுதிய கவிதைகள் மற்றும் பாடல்களை இன்றைய சினிமா பாடல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்யுங்கள். உங்கள் திறமையின் மீது எப்போது உங்களுக்கே நூறு சதவீதம் நம்பிக்கையும், தைரியமும் வருகிறதோ அப்போது என்னை அணுகுங்கள்.

படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டா?
அந்த எண்ணம் இல்லை. ரசிகர்களின் இதயம் கவர்ந்த இசையமைப்பாளராக இருக்கவே விரும்புகிறேன்.

Comments