சிநேகாவின் காதலர்கள்’ – இயக்குனராகும் பத்திரிகையாளர்!!!

14th of June 2013
சென்னை::தமிழன் திரைப்பட நிறுவனம் சார்பாக, தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் அளவான பொருட்செலவில் தயாரிக்க,    நகைச்சுவையான ‘நச்’ என்ற எழுத்து நடையால் பிரபலமடைந்த பத்திரிகையாளரும்,  சில முன்னணி இயக்குனர்களின் பின்னணியில் இருந்து அவர்களது வெற்றிக்கு அரும்பாடுபட்டவருமான முத்துராமலிங்கன்  எழுதி இயக்கும் படம் ‘சிநேகாவின் காதலர்கள்’.
 
முற்றிலும் புதுமுகங்களுடன், இதுவரை தமிழ்சினிமா சொல்லத்தயங்கிய விஷயத்தை திரைக்கு கொண்டு வரும் படமாக, தயாராகிறது ‘சிநேகாவின் காதலர்கள்.’
 
நட்பு – காதல் – காமம் இவற்றுடன் பயணப்படும் ஒரு இளம் பெண்ணின் ரகசிய உலகை அவளே சிநேகத்துடன் பகிர்ந்து கொள்ளும் படம் இது.
ஆண்கள் கோலோச்சும் இந்த உலகத்தில், உறவுகளுக்குள் தன்னைத் தொலைத்து விடாமல் தான் யார் என்பதைக் கண்டறிய ,  காத்துக்கொள்ளப் போராடும் 21ஆம் நூற்றாண்டுப் பெண்தான் சிநேகா.
 
தமிழ்ச் சமூகத்தின் காதல் பற்றிய பழைய கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி ‘காதல்’ என்பதற்கான புதிய அர்த்தங்களை எழுதிப்பார்க்கிறாள் அவள். ஆண் – பெண் உறவுகளை பெண்களின் பார்வையில் பேச முற்படுகிறது ‘சிநேகாவின் காதலர்கள்’.
 
படத்தைப் பற்றி இயக்குனர் முத்துராமலிங்கன் கூறுகையில், “”தமிழ் சினிமாவை இதுவரை கவ்விக் கொண்டிருந்த ‘மசாலா சூதுகள்’ விடைபெறும் ‘நேரம்’ வந்து விட்டது. பஞ்ச் டயலாக், பறந்துபறந்து அடிக்கும் ஃபைட்டு, குத்துப்பாட்டு போன்ற வெத்துவேட்டுக்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, ‘புதுசா எதாவது சொல்லுங்க பாஸ்’ – என்று கேட்கும் தமிழ் சினிமா ரசிகனின் வேட்கைக்கு தீனியாக வருகிறது ‘சினேகாவின் காதலர்கள்”.
துணிச்சலான சிநேகா, அவரது வாழ்வில் கடந்து செல்லும் 4 இளைஞர்களின் பாத்திரம் மற்றும் முக்கிய பாத்திரங்களுக்கான தேர்வு துரிதமாக நடைபெற்று வருகிறது.
 
“மற்றபடி நடிகை சிநேகாவுக்கும் இந்தக் கதையில் இடம்பெறும் சிநேகாவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் இல்லை. அதை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் அவரே ஒரு குட்டி கவுரவ வேடத்தில் நடிக்கவும் கூடும்,” என்கிறார் இயக்குனர்.
 
இசைக்கு முக்கியத்துவம் உள்ள, இசையில் புதிய ஒரு அனுபவத்தைக் கொடுக்கவல்ல, எட்டுப்பாடல்கள் இடம் பெறும் இப்படத்துக்கு மதுரை, அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் இரா. ப்ரபாகர் இசையமைக்கிறார். பாடல்கள் நெல்லைபாரதி.
தயாரிப்பு நிர்வாகம் – அருள், இணை தயாரிப்பு – அமலா கலைக்கோட்டுதயம். மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
ஜுன் இறுதியில் கொடைக்கானலில் படப்பிடிப்பு துவங்கி, மதுரை பெங்களூர் வழியாக ஆகஸ்டில் படப்பிடிப்பு முடிவடைகிறது.
டிசம்பரில் படம் வெளிவர இருக்கிறது.
.

Comments