உதவி இயக்குநர்களுக்காக 'உ' திரைப்படக் குழுவினர் உருவாக்கிய பாடல்!!!

Friday,3rd of May 2013
சென்னை::இந்தியாவின் முதல் சினிமா 'ராஜா ஹரிச்சந்திரா' 1913ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. 2013 மே மாதம் 3ஆம் தேதி இந்திய சினிமா துவங்கி நூற்றாண்டு நிறைவடைந்ததை ஒட்டி, உதவி இயக்குநர்களுக்காக 'உ' திரைப்பட குழுவினர் ஒரு பாடலை உருவாக்கி உள்ளனர். அபிஜித் ராமசுவாமி இசையில் முருகன் மந்திரம் எழுதி உள்ள 'ஆஹா இது சினிமா, ஆளை ஆட்டிப்படைக்கும் சினிமா' என்ற அந்தப்பாடலை பாடகர் முகேஷ் பாடி இருக்கிறார்.

இதுபற்றி 'உ' படத்தின் இயக்குநர் ஆஷிக் கூறுகையில், முதல் இந்திய சினிமா வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதை இந்திய சினிமாத்துறையினரும் இந்திய அரசும் கொண்டாடும் இந்த நல்ல வேளையில், நான் இயக்குநராக அறிமுகம் ஆவது எனக்கு சந்தோசமாக இருக்கிறது.

கோடம்பாக்கத்தின் தெருக்களில் கண்கள் நிறைய கனவுகளை சுமந்தபடி நடமாடுகிற உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவரையும் பார்க்கும்போதும், சினிமா என்கிற இந்த கோட்டையில் சாதிப்பதற்கு முன் ஒவ்வொருவரும் அனுபவிக்கிற வலி கண்முன் தோன்றும். உதவி இயக்குநர்கள் மட்டுமல்லாது சினிமாவின் அத்தனை துறைகளிலும் ஜெயிப்பதற்காக ஊரை விட்டு உறவை விட்டு வந்து போராடுகிறவர்களின் வாழ்க்கையை பற்றி ஒரு பாடல் பண்ண நினைத்தோம். இசை அமைப்பாளர் அபிஜித் ராமசுவாமி , பாடலாசிரியர் முருகன் மந்திரம் கிட்ட இந்த விசயத்தை சொன்னேன். உடனே அபிஜித் மெட்டு போட, அப்டியே கேட்டு அங்கேயே பாடல் வரிகளை எழுதினார் முருகன் மந்திரம். பாட்டுல ஒரு சரணத்தில்,

வாடகைக்கு வீடு கேட்டா
மொறைப்பான்
பொண்ணு கேட்டு போயி நின்னா
ஒதைப்பான்

வேலையத்த வேலையின்னு
சிரிப்பான்
அட்வைஸ் நூறு அள்ளி விட்டு
கலாய்ப்பான்

நம்பிக்கைய மட்டும் தாங்க
நெஞ்சுக்குள்ள வெதைப்போம்
வெள்ளித்திரை சாமி தாங்க
வெற்றி கேட்டு ஜெபிப்போம்

ஜெயிச்சு வந்தவன்,
அவன் ரொம்ப கொஞ்சந்தான்
ஆனா, ஜெயிக்கப்போறவன்
இங்க எக்கச்சக்கந்தான்.

உதவி இயக்குநர்கள் வாழ்க்கை அப்டியே வரிகளில் கெடைச்சது. அழகான மெட்டும், ஆழமான வரிகளும் கெடைச்ச உடனே, பாடகர் முகேஷை வச்சி பாடவச்சோம். சினிமாவுக்காக போராடுறவங்களோட வாழ்க்கை பத்தின இந்தப் பாட்டை என்னைப் பாட வச்சதுக்கு ரொம்ப நன்றின்னு சொல்லி அழகா பாடித்தந்தார்.

பாட்டு ரெக்கார்ட் பண்ணி முடிச்சதும் சினிமா நண்பர்கள் சிலர் கிட்ட போட்டு காட்டினோம். கேட்டுட்டு சில நிமிசம் அமைதியா ஃபீல் பண்ணிட்டுத்தான் பேசவே ஆரம்பிச்சாங்க. பாட்டு அவ்ளோ கனமா இருக்கு. கண்டிப்பா இந்த பாட்டை சினிமால ஜெயிக்கப்போறவங்க கேட்டாலும், ஜெயிச்சவங்க கேட்டாலும் ஒரு நிமிசம் தன்னோட வாழ்க்கையோட பொருத்திப்பார்க்காம இருக்க முடியாதுன்னு சொன்னாங்க. கேட்க ரொம்ப சந்தோசமா இருந்துச்சி.  சீக்கிரமே இசை வெளியிட பிளான் பண்ணிட்டிருக்கோம்.

என்றார் இயக்குநர் ஆஷிக்.

Comments