பட விழாக்களுக்கு போதையில் வருகிறேனா? மறுக்கிறார் விமல்!!!

Thursday,16th of May 2013
சென்னை::களவானி படத்தின் மூலம் வெற்றி நாயகனாக ஜொலித்தவர் நடிகர் விமல், தொடர்ந்து வாகை சூடவா போன்ற எதார்த்த படங்களிலும், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற நகைச்சுவை படங்களிலும் அசத்தினார். இன்றைய தேதியில் சிறு பட்ஜெட் படாதிபதிகளின் விருப்ப நாயகர்களில் நடிகர் விமலும் ஒருவர். தற்போது நேற்று இன்று, ரெண்டாவது படம், தேசிங்கு ராஜா, ஜன்னல் ஓரம் உள்ளிட்ட அரைடஜன் படங்களில் நடித்து வரும் விமல், தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* காமெடி படங்களில்  அதிகமாக நடிக்கிறீர்களே?

காமெடி கதைகள் தான், என்னை அதிகமாக தேடி வருகின்றன. காமெடி கலந்த சீரியஸான கதையை கொண்ட, "ஜன்னல் ஓரம் படத்தில் நடிக்கிறேன். அந்த படம், கண்டிப்பாக, நான், இதற்கு முன் நடித்த படங்களை விட, வித்தியாசமாக இருக்கும்.

* பட விழாக்களுக்கு போதையில் வருவதாக உங்கள் மீது, குற்றச்சாட்டு உள்ளதே?

இப்படி ஒரு குற்றச்சாட்டு உள்ளது என்பது எனக்கும் தெரியும். நான், எந்த விழாக்களுக்கும் மது குடித்து விட்டு போவது இல்லை. அதுக்காக, பட விழாக்களுக்கு போகும்போது, ஒவ்வொருத்தருக்கும், நான் குடிக்கவில்லை என, நிரூபித்து காட்டவா முடியும். என், முக அமைப்பு, அப்படி இருக்கிறது. அதற்கு நான், என்ன செய்ய முடியும். சாதாரணமாக பேசினாலே, தண்ணி அடித்து விட்டு பேசுவது போல் இருக்கும். நிறைய பேர், இதை என்கிட்டயே சொல்லியிருக்காங்க. தயவு செய்துதப்பான செய்தியை, சொல்ல வேண்டாம்.

* உங்களுக்கு போட்டியாக, யாரை கருதுகிறீர்கள்?

விஜய சேதுபதி, சிவ கார்த்திகேயன், "அட்டகத்தி  தினேஷ் போன்றவர்களுக்கு, தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இவர்கள், எனக்கு போட்டியாக வரக் கூடும். திறமையானவர்கள் முன்னுக்கு வருவது, தப்பு இல்லையே.

* ஓவியா, பிந்து மாதவிக்கு  சிபாரிசு செய்கிறீர்களாமே?

அப்படி எல்லாம், எதுவுமில்லை. படத்தின் ஹீரோயின் யார் என்பதை, தயாரிப்பாளரும், இயக்குனர்களும் தான், முடிவு செய்கின்றனர். இதில், என்னுடைய வேலை, நடிப்பதை தவிர, வேறு எதுவுமில்லை. இதுவரைக்கும், யாருக்கும் நான், சிபாரிசு செய்தது இல்லை. சில நடிகைகளுடன், அடுத்தடுத்து சேர்ந்து நடிக்கும்போது, இப்படிப்பட்ட தகவல்கள் வெளியாகி விடுகின்றன.

* சிரமப்பட்டு நடித்த  படம், சரியாக ஓடவில்லையே என, வருத்தப்பட்டதுண்டா?

நான் நடித்த "வாகை சூடவா படத்தை, ரொம்பவே எதிர்பார்த்தேன். வித்தியாசமான கதைக் களத்தில் தயாரான, "பீரியட் பிலிம் அது. இந்த படத்துக்கு அதிகமான விருதுகள் கிடைத்தன. ஆனாலும், அந்த படம், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதற்காக வருத்தப்பட்டேன்.

Comments