Thursday,16th of May 2013
சென்னை::விஷால் தானே தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ‘பாண்டிய நாடு’ படம் இன்று படப்பிடிப்புடன் ஆரம்பமானது. இதை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்ச்சியில் விஷால் பேசும் போது, “சினிமாவைப் பொறுத்த வரைக்கும் இப்ப எனக்கு மூணாவது அவதாரம். முதல்ல ஒரு உதவி இயக்குனரா என்னோட வாழ்க்கையத் தொடங்கினேன். அப்புறம் ‘செல்லமே’ படம் மூலமாக நடிகனானேன். இப்ப இந்த ‘பாண்டிய நாடு’ படம் மூலமா தயாரிப்பாளரா ஆகியிருக்கேன்.
இத்தனை வருடங்களா என்னை ஒரு நடிகனா செதுக்கிய டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு இந்த நேரத்துல என்னோட நன்றிய தெரிவிச்சிக்கிறேன். எனக்கு சினிமாதான் எல்லாமே, என்னோட அண்ணணுக்கும் , அப்பாவுக்கும் எப்படியாவது என்னை சினிமாவுல ஜெயிக்க வச்சிடணும்கறதுதான் ஆசையா இருந்தது. அந்த அளவுக்கு சின்ன வயசுல இருந்தே சினிமாவை காதலிச்சிட்டு வர்றேன்.
எல்லாரும், எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறன்னு கேக்கறாங்க. நான் நிஜ வாழ்க்கையில யாரையும் காதலிக்கிலை. ஆனால், என்னை யாராவது காதலிச்சிருக்கலாம். இப்போதைக்கு என்னோட கவனம் எல்லாம் ‘பாண்டிய நாடு’ படத்து மேலதான் இருக்கு. இந்த வருஷம் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் பண்றோம்.
நிறைய பேர் என்னைப் பார்க்கும் போது சொந்த ஊர் மதுரையான்னு கேப்பாங்க. அந்த அளவுக்கு என்னை ஒரு மதுரைக்காரனவே பார்க்கிறாங்க. அதனாலதான் என் தயாரிப்புல வர்ற முதல் படத்துக்கும் ‘பாண்டிய நாடு’ன்னு பேர் வச்சிருக்கேன், ” என்றார் விஷால்.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகி லட்சுமி மேனன், இயக்குனர் சுசீந்தரன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் மதி, படத்தொகுப்பாளர் ஆண்டனி, காஸ்டிம் டிசைனர் வாசுகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment