இயக்குவதை விட நடிப்பதே எளிதானது - நடிகை அம்பிகா!!!

Friday,10th of May 2013
சென்னை::1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அம்பிகா, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார்.

தற்போது குணச்சித்திரம் மற்றும் அம்மா வேடங்களில் நடித்து வரும் அம்பிகா 'நிழல்' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

புதுமுகங்களை வைத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் படம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். மலையாளத்தில் 'அலபெல்லா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தமிழில் 'நிழல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகியுள்ள இப்படம் வித்தியாசமான திரைக்கதை யுக்தியில், பாயிண்ட் ஆஃப் வீவ் என்ற முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைப் பற்றியும், படத்தில் நடித்தவர்களையும் நேற்று (மே 8) இயக்குநர் அம்பிகா, பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது நடிப்பது எளிதாக இருக்கிறதா படம் இயக்குவது எளிதாக இருக்கிறதா என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அம்பிகா, "உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நடிப்பது தான் எனக்கு எளிதாக இருக்கிறது. படம் இயக்குவதில் ஏகப்பட்ட டென்சன் இருக்கிறது. இப்போதுதான் புரிகிறது சில இயக்குநர்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என்று, ஆனால், என் படத்தில் நடித்த எந்த நடிகர்களிடமும் நான் ஒரு நாள் கூட கோபப்பட்டதில்லை.

இப்படத்தை வித்தியாசமான் முறையில், புதுமையான திரைக்கதை யுக்தியை பயன்படுத்தி படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தின் கான்சப்ட் எனது தம்பி சுரேஷ் தான் சொன்னார். நானும் நீண்ட நாட்களாக படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால், இந்த கதைக்கு திரைக்கதை அமைத்து எனது தம்பியுடன் இணைந்து இயக்கியுள்ளேன். இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இது புதுமுகங்கள் நடிப்பதற்கான படம் தான். இதில் நடித்த அனைவரும் இப்படத்தின் மூலம் பிரபலமாவார்கள் என்று நான் நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.

நிழல் படத்தில் அம்பிகா நடித்தது தொடர்பாக கேள்வி கேட்டதற்கு, அதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்று அவர் கூறிவிட்டார்.

இப்படத்தின் கதை, திரைக்கதையை அம்பிகாவின் சகோதரர் சுரேஷ் நாயர் எழுதியுள்ளார். டாக்டர் சி.வி.ரஞ்சித் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கல்யாண ரமேஷ், சுரேஷ் நாயர் ஆகிய இருவரும் வசனம் எழுதியுள்ளனர்.

மேஜர் கிஷோர் என்ற புதுமுகம் ஹீரோவாகவும், மிஸ் கேரளா பட்டம் வென்ற இந்து தம்பி ஹீரோயினாகவும் அறிமுகமாகியுள்ள இப்படத்தில் பிரசூன் கிருஷ்ணா, ஜெமோன் ஜோஸி, சுரேஷ் வெங்கட், பிரதீப் சந்திரா ஆகிய புதுமுகங்களும் நடித்துள்ளார்கள்.

Comments