என் திரையுலக பயணம் ரோலர் கோஸ்டர் போன்றது: கங்கனா ரணாவத்!!!

Friday,31st of May 2013
சென்னை::இந்தியில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை கங்கனா ரணாவத். தமிழில், ஜெயம் ரவியுடன் "தாம் தூம்" படத்தில் ஜோடி போட்டவர் அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் இந்திக்கே சென்றுவிட்டார். தற்போது அங்கு பெயர் சொல்லும் நடிகைகளில் கங்கனா ரணாவத்தும் ஒருவராக இருக்கிறார். அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி...

* அன்னையர் தினத்தன்று நீங்கள் பேசியது,   பரபரப்பை ஏற்படுத்தி விட்டதே?

எப்பவும் யதார்த்தமாக பேச வேண்டும் என, நினைப்பவள் நான். அதனால், என் சிறு வயதில் என்ன நடந்ததோ, அதை அப்படியே பேசினேன். வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என்பதற்காக, அம்மாவிடம், துடைப்பக் கட்டையால், செம அடி வாங்கியிருக்கிறேன் என, கூறினேன். அது, பரபரப்பான செய்தியாகி விட்டது.

* உங்கள் திரையுலக பயணம்  நிலையானதாக இல்லையே?

உண்மை தான். நான் நடித்த சில படங்கள், பெரும் வெற்றியை பெற்றுள்ளன. "கேங்ஸ்டர், பேஷன், சூட்அவுட் அட் வடாலா போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அதேபோல், சில படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. மொத்தத்தில் என் திரையுலக வாழ்க்கை, "தீம் பார்க்கில் உள்ள, "ரோலர் கோஸ்டர் மாதிரி, ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது.

* படங்களின் தோல்வி, உங்களை  பாதித்துள்ளதா?

கண்டிப்பாக இல்லை. படத்தில் நடிப்பதுடன் என் வேலை முடிந்து விடுகிறது. படம், வெற்றி பெற்றால், சந்தோஷம். தோல்வி அடைந்தால், கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கும். ஆனால், அதை மூளையில் ஏற்றி, கவலைப்பட்டு கொண்டிருக்க மாட்டேன். படம் வெற்றியடைந்தால், அதற்காக, வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கவும் மாட்டேன்; தோல்வி அடைந்தால், அதை நினைத்து, மூலையில் முடங்கவும் மாட்டேன்.

* உங்களின் திரையுலக அனுபவங்கள் திருப்தி அளிக்கிறதா?

இந்த விஷயத்தில், நான் ஒரு அதிர்ஷ்டசாலி என்று தான் கூற வேண்டும். பல நடிகைகளுக்கு கிடைக்காத பெருமை, எனக்கு கிடைத்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில், பாலிவுட் ஜாம்பவான்களுடன் பணியாற்றி இருக்கிறேன். இந்த இளம் வயதில், இதுபோன்ற அதிர்ஷ்டம் கிடைத்தது, எனக்கு ரொம்பவும் திருப்தி அளிக்கிறது.

* அடுத்த படங்கள்? 

"ராஜியோ என்ற படத்தில், நாட்டியம் தெரிந்த பெண்ணாக நடிக்கிறேன். நடிப்பு, யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பல நடன பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள பெண்களின், நடை, உடை, பாவனைகள் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். இந்த அனுபவம், படப் பிடிப்பின்போது, எனக்கு மிகவும்  உதவியாக இருந்தது.

Comments