பெப்சி உடைகிறது: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் விலகல்!!!

Thursday,30th of May 2013
சென்னை::பெப்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. பெப்சி அமைப்பில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார். இதனால் பெப்சி உடையும் நிலையிலுள்ளது.
 
பெப்சி எனும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் சுமார் 23 சங்கங்கள் உள்ளன. இதன் தலைவராக டைரக்டர் அமீர் உள்ளார். இந்த அமைப்பிலுள்ள ஒவ்வொரு சங்கத்திலும் உட்கட்சி பூசல் நிறையவே உள்ளது.  அது அவ்வப்போது வெடிக்கிறது.
 
பெப்சியில் அங்கம் வகிக்கும் கார் டிரைவர்கள் யூனியன் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருவதால், அந்த யூனியனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று பெப்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக சங்க உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக சென்றபோது பெப்சியின் பொருளாளர் அங்கமுத்து சண்முகம் மற்றும் நிர்வாகி தனபால் ஆகிய இருவரும் தாக்கப்பட்டார்கள். இருவருக்கும் அடி-உதை விழுந்தது. இதுதொடர்பாக வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது.
 
அத்துடன் பெப்சியின் பொதுக்குழுவை கூட்டி, டிரைவர் யூனியனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பெப்சி நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் செந்தில் மற்றும் அவரது ஆதாரவாளர்களை கைது செய்யக்கோரி பெப்சி தொழிலாளர்கள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதனால் தமிழ்நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
 
லைட்மேன்கள், கேமரா உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலைக்கு வராததால், விஷால் நடிக்கும் பாண்டிய நாடு, கார்த்தி நடிக்கும் பிரியாணி உள்பட 40 படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகல்:
 
இதற்கிடையில் பெப்சி அமைப்பில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார்.
இதனால் பெப்சி சங்கம் உடையும் சூழல் உருவாகியுள்ளது. டிரைவர்ஸ் யூனியன் பஞ்சாயத்து தொடர்பான பேச்சுவார்த்தை கைகலப்பில் முடிந்தது. இதனால் பெப்சி அமைப்பு நேற்று முன்தினம்ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டது. இதனால் சின்னத் திரைதொடர்களுக்கான படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் பெப்சியில் அங்கம் வகிக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சியில் இருந்து விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
​சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தொடர்களை தயாரித்து வருகிறார்கள். ஆனால் சமீபகாலமாக தொழிலாளர்கள் அவர்களுக்குள் ஏற்படும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சின்னத்திரை படப்பிடிப்பை எந்தவித  முன்னறிவுப்புமின்றி நிறுத்திவிடுகிறார்கள். இதனால் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
 
மேலும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு குறித்த நேரத்தில் ஒளிப்பரப்பு செய்ய தங்களது தொடர்களை தரமுடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதற்கு மேலும் எங்களது தயாரிப்பாளர்கள் சோதனைகளை தாங்க முடியாத காரணத்தினால்  கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சின்னத்திரைகளுக்கு என்று தனிப்பட்ட தொழிலாளர்கள் அமைப்பு உள்ளது போல் தமிழ்நாட்டிலும் தொடங்குவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
பெப்சி தொழிலாளர்கள் சரியாக வேலைக்கு வராததால் தயாரிப்பாளர்கள் நிறைய பேருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு பலமுறை அழைத்தும் யாரும் பேச முன்வரவில்லை. இதனால் பெப்சியில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
 
இந்த சந்திப்பின்போது செயலாளர் டி.வி.சங்கர், பொருளாளர் டி.ஆர்பாலேஷ் மற்றும் சத்தியஜோதி தியாகராஜன், அழகன், தமிழ்மணி, மதி ஒளிகுமார், சோலைராஜா, ராமதாஸ் என பலர் கலந்து கொண்டனர்.
டிரைவர்ஸ் யூனியன் பிரச்னை, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் விலகல் உள்ளிட்ட பிரச்னைகளால் பெப்சி அமைப்பு உடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

Comments