மிரட்டிய சினிமா பைனான்சியர் சிறையில் அடைக்கப்பட்டார்!!!

Friday,24th of May 2013
சென்னை::குடியிருப்பு சங்கத்தின் அலுவலகத்திற்குள் புகுந்து துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் விஜயகர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.. கீழ்ப்பாக்கம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சப்தமாலிகா அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.  இதன் தரைதளத்தில் மருத்துவமனை, செல்போன் கடைகள் உள்ளன.
 
முதல் தளத்தில் ஜான்சன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவரது வீட்டில் சினிமா பைனான்சியார் விருதுநகரை சேர்ந்த விஜயகர் (50) கடந்த  5 வருடங்களாக வசித்து வருகிறார். இவர், கடந்த சில வருடங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஜான்சன் கோர்ட் மூலம் வீட்டை காலி செய்ய நடவடிக்கை எடுத்தார். 
 
இந்நிலையில் விஜய்கர் வீட்டிற்கு எதிரே உள்ள அந்த குடியிருப்போர் நல சங்க செயலாளர் ஜார்ஜ் வீட்டுக்கு விஜய்கர் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சென்றுள்ளார்.அவரிடம் விஜய்கர் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த விஜய்கர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.இதில், பயந்து வெளியே ஜார்ஜ் ஓடி வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.விஜயகர் இருந்த அறையில் ஒரு பெண் இருந்ததாக கூறப்படுகிறத
இந்நிலையில் துணை கமிஷனர் பவானிஸ்வரி தலைமையில் நேற்று முன்தினம் காலை முதல் விஜயகரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் போலீசார் அவனது அறைக்குள் நுழைய முயன்றனர். சுதாரித்து கொண்ட விஜயகர் அறையை பூட்டி கொண்டார். அவரது உறவினர்கள், நண்பர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனளிக்காமல் போனது. இரவு 8 மணியளவில் போலீசார் செல்வதாக அறிவித்ததும், அறையில் இருந்து வெளியே வந்த அவர் காரை எடுக்க முயற்சித்தபோது மறைந்து இருந்த போலீசார் விஜயகரை மடக்கி பிடித்து  டி.பி. சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 
 
இந்த சம்பவத்தால் 10 மணிநேரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு  11 மணியளவில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஆத்திரத்தால் இவ்வாறு நடந்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை டி.பி சத்திரம் போலீசார் விஜயகரை பெருங்களத்தூரில் உள்ள எழும்பூர் 13வது கோர்ட் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரை  15-ம் நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விஜயகர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
துப்பாக்கியை காட்டி மிரட்டிய பைனான்சியருடன் தங்கியது முகப்பேர் பெண்: 3 ஆண்டுகளாக பழகியது அம்பலம்
 
சென்னை கீழ்ப்பாக்கத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டல் விடுத்த பைனான்சியர் விஜய்கருடன் தங்கியிருந்த பெண் முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அப்பெண்ணின் பெயர் அகிலா. இவர் கணவருக்கு தெரியாமல் அடிக்கடி விஜய்கர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சென்றது அம்பலமாகியுள்ளது.
 
கடந்த 3 ஆண்டுகளாக விஜய்கருடன் இவர் நெருங்கி பழகியுள்ளார். அகிலா நன்றாக நடனமாடக்கூடியவர் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு விஜய்கர் போலீசில் சிக்கியதும் அகிலா, என்ன செய்வதென்று தெரியாமல் முகத்தை மூடிக்கொண்டு காரின் பின் சீட்டிலேயே படுத்திருந்தார்.
இந்த நேரத்தில்தான் பொதுமக்கள் விஜய்கர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் பத்திரமாக காருக்குள் வைத்தே அப்பெண்ணை போலீசார் அழைத்துச் சென்றனர். யாருக்கும் தெரியாமல் மிகமிக ரகசியமாக அப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.
 
அகிலாவும் போலீசில் ஒரு புகார் கொடுத்தள்ளார். அதில் அவர் 50 பேர் கொண்ட கும்பல் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார். இதுபற்றியும் தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
விஜய்கர் துப்பாக்கியுடன் மிரட்டியது ஏன்? என விசாரித்தபோது, விஜய்கர் தங்கியிருந்த வீட்டுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சரியாக வாடகை கொடுக்காததால் வீட்டின் உரிமையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கூறப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து விஜய்கர் குடியிருப்போர் சங்க தலைவர் ஜார்ஜை சந்தித்து தனக்கு சாதகமாக கடிதம் கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார். அக்கம் பக்கத்தில் வசிப்போர் அனைவரும் விஜய்கர் தினமும் வீட்டுக்கு பெண்களை அழைத்து வருவதாக புகார் கூறிய நிலையில் ஜார்ஜிடம் என்னால் எந்த பிரச்சினையும் இல்லை என்று நீங்கள் கடிதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 
இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆவேசத்தின் உச்சிக்கே சென்ற விஜய்கர் துப்பாக்கியால் சுட்டு ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். தொழிலில் நஷ்டம் அடைந்த அவரை வீட்டை காலி செய்து விட்டால் எங்கு சென்று தங்குவது என்கிற விரக்தியில்தான் இப்படி நடந்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
விஜய்கர் வீட்டில் நடத்திய சோதனையில் சினிமா சூட்டிங் கேமரா ஒன்றும் சிக்கி உள்ளது. அவர் 2 சினிமா படங்களிலும் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Comments