எனது கண்டிஷனுக்கு ஒத்துப்போனால் புதுமுக இயக்குநர்களுடன் இணைவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்!!!

Thursday,16th of May 2013
சென்னை::தனது விதிமுறைகளுக்கு ஒத்துப்போனால் நல்ல கதை வைத்துக்கொண்டிருக்கும் தமிழ் திரையுலக புதுமுக இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைக்க தான் தயார்  என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

விளம்பரம் மற்றும் டாக்குமெண்டரி படங்கள் இயக்குநர் பரத்பாலா, இயக்கும் முதல் தமிழ்ப் படமானா மரியான் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, பார்வதி ஹீரோயினாக நடிக்கிறார்.

பரத்பாலா, ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் இசை ஆல்பத்தை இயக்கியவர் ஆவார். மரியான் படம் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்றாலும், இப்படம் நபீபியா நாட்டிலும், தமிழக கடலோர கிராமத்திலும் படமாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடமாக படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் தனுஷ் மீனவராக நடித்துள்ளார். கடக்கு அடியில் 50 அடி ஆழாம் வரை சென்று தனுஷ் மீன் பிடிப்பது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இது போன்ற காட்சிகள் அடங்கிய இப்படத்தின் டீசர் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

மொத்தத்தில் மரியான் படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மரியான் படக்குழுவினர் நேற்று (மே 14) பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நல்ல கதை வைத்திருக்கும் அறிமுக இயக்குநர்கள் படங்களுக்கு இசை அமைப்பீர்களா? என்று ரஹ்மானின் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "பரத்பாலாவுக்கு இது தான் முதல் படம். அப்படி அல்ல, தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் ஆறு மாதத்தில் ஒரு படத்தை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும், அதனால் தான் அதிகமான தமிழ்ப் படங்களில்  என்னால் வேலை செய்ய முடிவதில்லை." என்றார். அப்போது உங்கள் கண்டிஷனுக்கு உட்பட்டு வந்தால் உங்களுக்கு சம்மதமா? என்றதற்கு, "கண்டிப்பாக எனது விதிமுறைகளுக்கு உட்பட்டு, நல்ல கதை வைத்திருக்கும் புதுமுக இயக்குநர்களிடன் படங்களுக்கு கண்டிப்பாக இசையமைப்பேன்." என்று ரஹ்மான் கூறினார்.

மரியான் படத்தில் நடித்த அனுபவம் பற்றி தனுஷ் கூறுகையில், "‘மரியான்’ படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். நபீபியா நாட்டில் கிளைமாக்ஸ் சீன்கள் எடுத்தோம். அங்கு பயங்கர வெயில். பாலைவனத்தில் செருப்பு அணியாமல் நடிக்க வைத்தனர். மணலில் வெறும் காலுடன் நிற்க முடியல. மண், தூசி என்று ரொம்ப சிரமப்பட்டேன். இந்த படத்தில் நடித்து இருக்க கூடாது என்றுகூட நினைத்தேன். சிறுத்தையுடனும் நடிக்க வைத்தார்கள். அதை பார்த்து பயந்தேன். ஒருநாள் முழுவதும் சிறுத்தையுடன் இருக்க வைத்தார்கள். இவ்வளவு மெனக்கெட்டு நடித்ததற்கு பலன் கிடைத்துள்ளது. படத்தை பார்த்து சந்தோஷப்பட்டேன்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறி இருக்கிறது. படத்துக்கு இசை முக்கியமானதாக இருக்கும். இதில் நானும் ஒரு பாடல் எழுதி உள்ளேன். கதைதான் இந்த படத்தில் என்னை நடிக்க தூண்டியது." என்று தெரிவித்தார்.

Comments