சென்னையில் 7டி தியேட்டர்

Wednesday,22nd of May 2013
சென்னை::சென்னை புரசைவாக்கம் அபிராமி மெகா மாலில், இந்தியாவிலேயே முதல்முறையாக 7டி (7 பரிமாண) தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இசையமைப்பாளர் தேவா திறந்து வைத்தார். தியேட்டர் குறித்து அதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல் பரிமாணம் என்பது, சிறந்த முப்பரிமாணத்தில் படம் பார்ப்பது. 2வது, அற்புதமான அதிரும் ஒலி கொண்டது. 3வது, உணர்வது. 4வது, நறுமணம். 5வது, காற்று மற்றும் மின்னல். 6வது, மழை. 7வது, பனிப்பொழிவு. இந்த 7டி தியேட்டருக்கான உபகரணங்கள் மற்றும் 7டி படங்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட திரையரங்கில், அதிர்வுகளுடன் கூடிய இருக்கைகள், சவுண்ட் சிஸ்டம், நீர் அலைகள், மழை, பனிப்பொழிவு மற்றும் முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை உணர்ந்து பரவசப்படும் விதத்தில் தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளன.

படம் பார்க்கும்போது, ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் அசையும். மழைச்சாரலையும், பனிப்பொழிவையும், குளிர்ந்த நீரின் அற்புதத்தையும் நன்கு உணர முடியும். புயல், சூறாவளி, இடி, மின்னல் ஏற்படும். திரையில் எந்த காட்சியைப் பார்த்து ரசிக்கிறார்களோ, அதற்கு மத்தியில் ரசிகர்களும் இருக்கும் மாயத்தை உணர்வார்கள். அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் ரீல் பேக்டரி மீடியா ரவிசங்கர், சரண்யா இணைந்து 7டி தியேட்டரை வடிவமைத்துள்ளனர் என்றார்.

Comments