காங்கயம் அருகே ஷாருக்கான் படப்பிடிப்பு நிறுத்தம்!!!

Tuesday,30th of April 2013
சென்னை::காங்கயம் அருகே அனுமதி பெறாமல் கோவிலில் படப்பிடிப்பு நடத்தியதால், இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்த படப்பிடிப்பு திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.
நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் படப்பிடிப்பு சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப் படப்பிடிப்பின் ஒருபகுதி திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே வட்டமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
11 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோனே, டெல்லி கணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்க, கோவிலின் உள்பகுதியில் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில், ஷாருக்கான் தீபிகா படுகோனேவிடம் தனது காதலைத் தெரிவிப்பது போல காட்சி படமாக்கப்பட்டது.
அடுத்த காட்சிக்கு குழுவினர் தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், கோவிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறப்படவில்லை. இதனால், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றனர். இன்னும் ஒரு காட்சி மட்டும் எடுத்துக் கொள்கிறோம். அதற்கு அனுமதி கொடுங்கள் என படப்பிடிப்புக் குழுவினர் கேட்டனர். ஆனால், படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை எனத் தெரிவித்து, படப்பிடிப்புக் குழுவை வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன் பிறகு, படப்பிடிப்பை ரத்து செய்து அனைவரும் கோவிலை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து படப்பிடிப்புக் குழுவினர் கூறுகையில், இன்னும் இங்கு காட்சிகள் எடுக்கப்பட வேண்டியது இருப்பதால் உரிய அனுமதி பெற்று விரைவில் படப்பிடிப்பு தொடரும் என்றனர். நடிகர் ஷாருக்கான் கூறுகையில், இப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் மற்றும் இப் பகுதியிலும் காட்சிகள் எடுக்கப்படுகின்றன. தமிழர்கள் நீண்ட கலாசாரப் பின்னணி கொண்டவர்கள். மிகவும் எளிமையாகப் பழகுகிறார்கள். தமிழகத்தில் இருந்து அதிக அளவில் தரமான படங்கள் வெளிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும், பாதுகாப்புக்கு வந்த காங்கயம் போலீஸாரும் ஷாருக்கானுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தீபிகா படுகோனே இந்தி நடிகை என்பதால், இங்குள்ளவர்களுக்கு அவரை அடையாளம் தெரியாததால், படப்பிடிப்பு ரத்தானவுடன் அவர் காரில் ஏறிச் சென்றதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

Comments