சுந்தராஜன் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் 'சித்திரையில் நிலாச்சோறு!!!

Friday,26th of April 2013
சென்னை::பயணங்கள் முடிவதில்லை, அம்மன் கோயில் கிழக்காலே, என் ஜீவன் பாடுது, மெல்ல திறந்தது கதவு, வைதேகி காத்திருந்தாள் என ஏராளமான ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தராஜான். இவருடைய படங்கள் எப்படி மிகப்பெரிய ஹிட்டோ அதைவிடம் இவர் படத்தில் இடம்பெறும் பாடல்கள் பெரிய ஹிட்டாகும். இளையராஜா இசையில் இவருடைய அனைத்துப் படங்களின் பாடல்களும் தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவையாகும்.

நீண்ட இரு இடைவெளிக்குப் பிறகு ஆர்.சுந்தராஜான் 'சித்திரையில் நிலாச்சோறு' என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு இசைஞானி தான் இசையமைத்துள்ளார். சுந்தராஜன் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தற்போது ரசிகர்களிடையே பலமான எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் சார்பில் பழனிச்சாமி என்பவர் தயாரித்துள்ள இப்படத்தில் புதுமுகங்கள் நடிக்க, முக்கிய வேடத்தில் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடித்த சாரா அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல் 25) சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கோவை தம்பி, கலைப்புலி ஜி.சேகரன், கேயார் உள்ளிட்ட ஏராளமானோர்கள் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும், இயக்குநர் ஆர்.சுந்தராஜான் - இளையராஜா கூட்டணியின் உருவான பாடல்கள் குறித்தும், படங்கள் குறித்தும், சுந்தராஜனின் நகைச்சுவை உணர்வு பற்றியும் பேசினார்கள். நிகழ்ச்சி முழுவதுமே கலகலப்பாக ஏதோ ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்தது போல இருந்தது...
 
வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடவே வராது’ – இளையராஜா!
 
ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் ‘சித்திரையில் நிலாச் சோறு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிவகுமார், சத்யராஜ், இளையராஜா, ஆர். சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இளையராஜா பேசும் போது, “ பொதுவா இந்த அரங்கத்துலயே நடந்த நான் இசையமைத்த படங்களுக்கு நான் வந்ததில்லை, இந்த படத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையை இறைவன் ஏற்படுத்தி விட்டான். உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி.
 
நான் இசையமைக்கிற படத்தை பத்தி பொதுவா சொல்றதில்லை. இந்த படத்துல இதை பண்ணியிருக்கேன், அதை பண்ணியிருக்கேன்னு பேசறது தேவையில்லாதது. ஏன்னா, இசையை கேட்டால் நீங்களே முடிவு பண்ணிடப் போறீங்க.
 
சில வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடறதுக்கு வரவே வராது. பல நடிகர்களை நீங்க யோசிச்சி பாருங்க. அவங்க பாட்டு பாடினால், அவங்களுக்கு கம்போஸ் பண்றப்ப என்னோட மன நிலை பாட்டுக்கு போகணும் இல்லையா.
ஆனால், இதையெல்லாம் மீறி சத்யராஜ் வில்லனா இருக்கிறப்ப ‘என்னம்மா கண்ணு…செளக்கியமான்னு ஆரம்பமாச்சி…அப்புறம் அவர் ஹீரோவானதுக்கப்புறம் ‘தாஸ் தாஸ்…சின்னப்ப தாஸ்னு’ டூயட் போடறதுக்கு வசதியா இருந்துச்சி.
 
இப்படித்தான் பாரதிராஜா ‘புதிய வார்ப்புகள்’ படம் எடுக்கும் போது பாக்யராஜ்தான் ஹீரோன்னு முடிவு பண்ணாரு. என்னய்யா நாங்கள்லாம் மியூசிக்லாம் போட வேண்டாமா, முகத்தைப் பார்த்தால் மியூசிக் போடணும்னு  தோணுமான்னு ஓபனா கேக்கறன்.
அதுல என்ன தவறுன்னா, பின்னாடி நான் உணர்ந்தது. இவர் அற்புதமான திரைக்கதை அமைப்பவர். இந்தியாவுலயே பேர் வாங்கினவரு.
ஒரு கலைஞனை முழுமையாகப் புரிந்து கொள்ளக் கூடிய நேரத்துலதான் அந்த பாராட்டுக்கு அர்த்தம் வருது.
 

புதிய வார்ப்புகள் படத்துல பாரதிராஜா, பாக்யராஜை ஹீரோவா செலக்ட் பண்ணது அந்த படத்துக்கு பெரிய வெற்றியா அமைஞ்சது. பாக்யராஜுக்கும் பெரிய எதிர்காலம் அமைஞ்சது. அது மட்டுமல்ல, பாக்யராஜ் சிறந்த திரைக்கதை ஆசிரியரா இருந்ததாலதான், அவருடைய வாழ்க்கைக்கு, வெற்றிக்கு திரையுலக பயணத்துக்கு மிகப் பெரிய விஷயமா அமைஞ்சதுன்னு உங்க எல்லாருககும் தெரியும்.
 
அந்த நேரத்துல அப்ப நான் பாக்யராஜை  நம்பலை. படத்தைப் பார்த்த பிறகுதான் பாக்யராஜைப் பத்தி தெரிஞ்சுது, அடடா, பெரிய தப்பு பண்ணிட்டோமே, யார் கிட்டட என்ன திறமை இருக்குன்னு தெரியாம நாம எதுவும் சொல்லக் கூடாதுன்னு முடிவெடுத்தேன்.  அன்றிலிருந்து யாரைப் பற்றியும் எந்த முடிவும் எடுப்பதில்லைன்னு ஒரு பெரிய பாடத்தை பாக்யராஜிடமிருந்து கற்றுக் கொண்டேன்,” என பேசினார்.

Comments