இதுவரை ஜோடியாக நடித்தவர்களில் மிக பொருத்தமான கதாநாயகி யார்? நடிகர் சூர்யா பேட்டி!!!

Wednesday,17th of April 2013
சென்னை::இதுவரை ஜோடியாக நடித்த கதாநாயகிகளில் தனக்கு மிக பொருத்தமானவர் யார்? என்ற கேள்விக்கு சூர்யா பதில் அளித்தார்.
‘சிங்கம்–2’
 
சூர்யா நடிக்க, ஹரி டைரக்டு செய்யும் ‘சிங்கம்–2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது தூத்துக்குடியில் நடைபெறுகிறது. அங்கிருந்தபடி சூர்யா போன் மூலம் ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘‘தூத்துக்குடி மக்கள் பாசம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். இதுபோல் என் மீது அதிக அன்பு காட்டியவர்களை வேறு எங்கும் பார்த்ததில்லை. ரொம்ப மரியாதை கொடுக்கிறார்கள். இவர்களுக்கு நாம் திருப்பிக் கொடுக்கப் போவது என்ன? என்று யோசிக்கிறேன். நல்ல படம் கொடுப்பதுதான் இப்போதைக்கு நம்மால் செய்ய முடிந்தது என்று கருதுகிறேன்.
 
2 படங்கள்
 
அடுத்து, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தை அவருடைய சொந்த பட நிறுவனமான போட்டோன் கதாஸ் தயாரிக்கிறது. ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும். அதையடுத்து, லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். அவருடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கும். இரண்டு படங்களுக்கும் கதாநாயகிகள் முடிவாகவில்லை.
 
ரசிகர்களுக்கு போட்டி
 
‘சிங்கம்’ படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். இந்த போட்டி பற்றிய விவரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். அதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் ஒரு நாள் முழுவதும் என்னுடன் படப்பிடிப்பில் இருக்கலாம். இதற்காக ஒரு ‘வெப்சைட்’ தொடங்கப்படுகிறது.’’ இவ்வாறு சூர்யா கூறினார்.
அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சூர்யா அளித்த பதில்களும் வருமாறு:–
 
கார்த்தியுடன்...
 
கேள்வி:– நீங்களும், உங்கள் தம்பி கார்த்தியும் இணைந்து நடிப்பது எப்போது, அந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்குமா?
பதில்:– அப்படி ஒரு கதை, டைரக்டர் வருவதைப் பொருத்து அது அமையும். இரண்டு பேரும் சீக்கிரமே சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நாங்கள் அவசரப்படவில்லை. அப்படி ஒரு படம் அமைந்து, அதை ஞானவேல்ராஜா தயாரித்தால் சிறப்பாகவே இருக்கும்.
 
சண்டை காட்சிகள்
 
கேள்வி:– சமீபகால படங்களின் சண்டை காட்சிகளில் அதிக ‘ரிஸ்க்’ எடுக்கிறீர்களே..?
பதில்:– ஒரு படத்தில் இருந்து இன்னொரு படம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் அதுவும் ஒன்று. சினிமா முதலில் இருந்தது போல் இல்லை. படத்துக்கு படம் ஏதாவது புதிதாக செய்ய வேண்டியிருக்கிறது. பாட்டு, நடனம் ஆகியவற்றுக்கும் அதே உழைப்பு, அதே ‘எனர்ஜி’யை போட வேண்டியிருக்கிறது.
மற்ற பெரிய நடிகர்களின் படங்கள், வெளிநாட்டு படங்களை பார்க்கும்போது அதற்கு இணையாக சண்டை காட்சிகளை அமைக்க வேண்டியிருக்கிறது. நம்மிடம் மிக திறமையான ஸ்டண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். நம்முடைய ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான் இந்தி படங்களிலும் பணிபுரிகிறார்கள்.
 
பொருத்தமான நாயகி
 
கேள்வி:– இதுவரை உங்களுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகிகளில் மிக பொருத்தமானவர் என்று யாரை சொல்வீர்கள்?
பதில்:– எல்லா கதாநாயகிகளுமே கடினமாக உழைக்கிறார்கள். முதல் படத்தை காட்டிலும் அடுத்த படத்தில் திறமையை கூடுதலாக வெளிப்படுத்த வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். ‘சிங்கம்–2’ படத்தில் அனுஷ்கா, ஹன்சிகா இரண்டு பேருமே இருக்கிறார்கள். இரண்டு பேருக்குமே இது மறக்க முடியாத படமாக இருக்கும்.
 
20 வருடங்களுக்குப்பின்...
 
கேள்வி:– இன்னும் 20 வருடங்களுக்குப்பின், சூர்யா நடிகராகவே இருப்பாரா, டைரக்டர் என்ற அடுத்த கட்டத்துக்கு உயர்வாரா?
பதில்;– எதிர்காலத்தை சொல்ல முடியாது. இன்னும் திட்டமிடவில்லை. நல்ல படமாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள். எதிர்காலத்தில் நான் நடிக்க முடியாத படங்களில், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிற மாதிரி நல்ல தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஒருகாலகட்டத்துக்குப்பின், குடும்பத்துக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்க்கையை இன்னும் அழகாக–சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வேண்டும். ‘அகரம்’ மூலம் இன்னும் அதிக சேவைகள் செய்ய வேண்டும்.’’மேற்கண்டவாறு சூர்யா பதில் அளித்தார்.

Comments