ரிச்சாக பேசும் ரிச்சா!!!

Tuesday,2nd of April 2013
சென்னை::இளம் ஹீரோக்களில் நண்பர்களாக இருந்து எதிரும் புதிருமாக மாறி, மீண்டும் நண்பர்களாக இருப்பது போல் பாவ்லா செய்து கொண்டிருக்கும் சிம்புவுடன் ‘ஒஸ்தி’, தனுஷுடன் ‘மயக்கம் என்ன’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர், ரிச்சா கங்கோபாத்யாயா. செல்லமாக, ‘ரிச்சா’.

அம்மணிக்கு டோலிவுட் சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. எனவே, அவ்விரு படங்களுக்குப் பிறகு கோலிவுட்டில் அவரது தரிசனம் கிடைக்கவில்லை. சிம்புவின் குரலை அப்படியே காப்பியடிக்கும் ஜெய்யுடன் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அவருடைய அணுகுமுறையில் என்ன குற்றம் குறை கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை, ரிச்சாவை நீக்கி விட்டனர். ஆனால், அதுபற்றி குண்டூசி அளவுகூட இவர் கவலைப்படவில்லை.

நல்ல வாய்ப்பு அமைந்தால் தமிழில் நடிப்பது. கிடைக்காத நிலையில், தெலுங்கு படங்களில் திறமை காட்டிக் கொண்டிருப்பது என்ற முடிவுக்கு வந்துள்ள ரிச்சா, கோலிவுட்டிலுள்ள தன் மேனேஜரிடமும் நெருக்கடி கொடுப்பது இல்லையாம். நல்ல கேரக்டர், பிரபலமான ஹீரோ, ஒழுங்காக சம்பளத்தை வெட்டும் நல்ல கம்பெனி என்றால் மட்டும் வாய்ப்பு கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

தன் குடும்பத்தினர் மீது ரிச்சாவுக்கு பாசம் அதிகம். அவர்கள் பேச்சை மீறி எந்த விஷயத்திலும் ஈடுபடுவது இல்லையாம். தவிர, கடவுள் பக்தியும் அதிகம். சமீபத்தில் கூட திருப்பதிக்கு சென்று, வெங்கடாஜலபதியை மனமுருக வணங்கியிருக்கிறார்.

மற்ற நடிகைகளைப் போல் பாசாங்கு வார்த்தை பேசி வாய்ப்பு வேட்டையாடுகின்ற எண்ணமும் ரிச்சாவுக்கு இல்லையாம். ‘பொறுமையாக காத்திருப்பேன். நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன். யாரையும் போட்டியாக நினைப்பதும் இல்லை. மற்றவர்கள் என்னைப் போட்டி நடிகையாக நினைக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்று தெளிவாகப் பேசுகின்ற ரிச்சா, எந்த விஷயத்தையுமே புவராக யோசிக்க மாட்டார் போலிருக்கிறது. பின்னே, ஒரு வார்த்தை பேசினாலும், ரிச்சாகப் பேசுகிறாரே!

Comments