என்னை இயக்குனராக்கிய இளையராஜா – மணிவண்ணன்!!!

Tuesday,2nd of April 2013
சென்னை::நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ – அமைதிப்படை – 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர் மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியின் 25வது படமாகவும், இயக்குனர் மணிவண்ணனின் 50வது படமாகவும், சத்யராஜின் 200வது படமாகவும் இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது .

எண்ணற்ற திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த இசை வெளியீட்டு விழாவில் மணிவண்ணன் பேசியதாவது,

நானெல்லாம் இயக்குநராவேன்னு எங்க டைரக்டர் பாரதிராஜா நம்பவே இல்ல. ஏன்னா அவருக்கு அவரைத் தவிர யாருமே இயக்குநர் இல்லேன்னு நினைப்பு.

பாரதிராஜா படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும்போது, அவருக்கு பாடலுக்கான சூழ்நிலையை சொல்வது, பாடல் வரிகளை எழுதி வாங்குவது என அத்தனை வேலைகளையும் நான்தான் செய்து வந்தேன்.

அவர்தான் என்னை தயாரிப்பாளர் கலைமணிக்கு அறிமுகப்படுத்தி, நம்ம பையன்தான், நல்ல திறமை இருக்கு, ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.

இளையராஜாவாலதான் நான் இயக்குநரானேன். ஆனால், இந்த படத்துக்கு அவரை இசையமைக்க வைக்க முடியலை. காரணம், பட்ஜெட் அதிகமாகிடும்னு தயாரிப்பாளர் சொல்லிட்டாங்க.

அமைதிப் படை 2-ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். ஆமா.. இது அரசியல்படம்தான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், ஆனால் சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.

ஒரு ஆசியரைப் பற்றி படமெடுத்தால் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களைப் பற்றி சொல்வது போல, ஒரு விவசாயியைப் பற்றிய படத்தில் விவசாயம், விவசாயி நிலையைச் சொல்வதுபோலத்தான் இதுவும்.

அமைதிப்படை முதல் பாகம் எடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளோம். மிகவும் திட்டமிட்டு, இந்த படத்தை குறைந்த நாட்களில் முடித்துள்ளோம்.

இன்றைய தலைமுறை ரசிகர்களையும் இந்த படம் நிச்சயம் கவரும்,” என்றார்.

நாகராஜசோழன் எம்.எ.எம்.எல்.ஏ. – இசை வெளியீடு!!!


இயக்குனர் மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியின் 25வது படமாகவும், இயக்குனர் மணிவண்ணனின் 50வது படமாகவும், சத்யராஜின் 200வது படமாகவும் விரைவில் வெளிவர இருக்கும் படம் ‘நாகராஜசோழன் எம்.எ.எம்.எல்.ஏ. – அமைதிப் படை -2’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, கிரீன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் எண்ணற்ற தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இயக்குனர்கள் கே. பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகரன், வசந்த், அமீர், சுந்தர் சி, எஸ்.பி. ஜனநாதன், ராம், சாமி, சுசீந்திரன், டி.பி.கஜேந்திரன், சந்தானபாரதி, தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, பி.எல். தேனப்பன், வி. ராமதாஸ், நடிகர்கள் சிவகுமார், ஸ்ரீகாந்த், விஜய் சேதுபதி, சிபிராஜ், ஷக்தி நடிகைகள் நமீதா, கஸ்தூரி, சந்தியா, சுஜிபாலா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அமைதிப்படை 2 ன் இயக்குனர் மணிவண்ணன், இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன், ஒளிப்பதிவாளர் டி. சங்கர், பாடலாசிரியர் நா. முத்துககுமார், எடிட்டர் சுதர்சன், நட்சத்திரங்கள் சத்யராஜ், சீமான், ரகுவண்ணன், கோமல் சர்மா, மிருதுளா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

படத்தின் இசையை இயக்குனர் அமீர் வெளியிட இயக்குனர் கே. பாக்யராஜ், பெற்றுக் கொண்டனர். டிரைலரை இயக்குனர் சுந்தர் .சி வெளியிட நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை நமீதா பெற்றுக் கொண்டனர்.

வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, எஸ். ரவிச்சந்திரன் மக்கள் தொடர்பாளர் ஏ. ஜான் அனைவரையும் வரவேற்றனர்.

Comments