Sunday,21st of April 2013
சென்னை::வேந்தர் மூவீஸ் தயாரிப்பில் பத்ரி இயக்கத்தில் சிவா, பிரகாஷ்ராஜ், இஷா தல்வார் மற்றும் பலர் நடிக்க தயாராகி வரும் படம் ‘தில்லு முல்லு’.
1981ம் ஆண்டு ரஜினிகாந்த், மாதவி நடித்த படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது. எம்.எஸ்.வி – யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு முதன் முறையாக இணைந்து இசையமைக்கிறார்கள்.
இப்படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் இவர்களிவரும் இணைந்து நடித்த ஒரு ஆல்பம் படமாக்கப்பட்டது. பழைய ‘தில்லு முல்லு’ படத்தில் எஸ்.பி.பி பாடிய ‘தில்லு முல்லு..தில்லு முல்லு…’ பாடலில் பொங்கி வழியும் இளமையும், துள்ளலையும் உணர்ந்து இந்த பாடலையே ஆல்பமாக எடுப்பது என்று முடிவு செய்தனர்.
பல இளம் அழகிகளுடன் எம்.எஸ்.வியும் , யுவனும் ஆடிப் பாடுவது போல் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலில் நடித்ததைப் பற்றி யுவன் கூறும் போது, “எம்.எஸ்.வி சாரும் அப்பாவும் இணைந்து ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘செந்தமிழ்ப்பாட்டு’ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள். நான், அவருடன் இணைந்து இசையமைப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.
இந்த படத்தில் ‘தில்லு முல்லு’…பாடலையும் ‘ராகங்கள் பதினாறு’…பாடலையும் ரீமிக்ஸ் செய்துள்ளோம். புதிதாக இரண்டு பாடல்களையும் உருவாக்கியுள்ளோம்.
இந்த ஆல்பத்தில் நடனமாடியதைப் பற்றி எம்.எஸ். வி கூறும் போது, “பாடலில் நான் எங்கே ஆடினேன், என்னை ஆட வைத்தார்கள் ,” என ஜாலி மூடில் கூறினார்.
இப்பாடலை ஒளிப்பதிவாளர் சரவணன் படமாக்க, பிரேம் ரஷித் நடனம் அமைத்தார்.
‘அந்த ‘தில்லு முல்லு’ போல் இந்த ‘தில்லு முல்லு’ இருக்குமா ?, பழைமையும், புதுமையும் கலந்த படமாக இருக்குமா என எழும் பல கேள்விகளுக்கு, இந்த ப்ரோமோ சாங் பதிலாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் பத்ரி.
Comments
Post a Comment