Sunday,21st of April 2013
சென்னை::தயாரிப்பு – ராதே பிலிம்ஸ் – இராஜகுமாரன், தேவயானி
இயக்கம் – இராஜகுமாரன்
இசை – எஸ்.ஏ. ராஜ்குமார்
பாடல்கள் – அருப்புக்கோட்டை தவசிமணி, மொரப்பூர் ஓவியன், அந்தியூர் நித்யா
ஒளிப்பதிவு – ராம் சிங்
படத்தொகுப்பு – டி.கே. குப்புசாமி
நடனம் – அசோக் ராஜா
சண்டைப் பயிற்சி – கனல் கண்ணன்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
வெளியான தேதி – 19 ஏப்ரல் 2013
நடிப்பு – இராஜகுமாரன், கீர்த்தி சாவ்லா, தேவயானி, ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், பிருத்வி ராஜ், ராதா ரவி, மதன் பாப், ஃபாத்திமா பாபு மற்றும் பலர்.
- – -
படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து விமர்சனம் வெளியிடுவதற்கு உண்மையிலேயே வருத்தமாக உள்ளது. எப்படியாவது படம் வெளியான அன்றே இந்த படத்திற்கு விமர்சனம் எழுதிட எவ்வளவோ முயன்றோம். ஆனால், எங்குமே டிக்கட் கிடைக்காததால் எங்களால் உடனே படம் பார்க்க முடியவில்லை.
நேற்றுதான் பத்திரிகையாளர்களுக்கான காட்சி நடந்தது. படம் முடிந்ததுமே இயக்குனர் இராஜகுமாரனுக்கும் ஒரு மூத்த பத்திரிகையாளருக்கும் வாக்குவாதம் நடைபெற்று அந்த பத்திரிகையாளர் விருட்டென்று சென்று விட்டார். எதனால் இந்த வாக்குவாதம் என்றால், படம் முடிந்ததும் அந்த பத்திரிகையாளர் இராஜகுமாரனிடம் சென்று படம் நீளமாக இருக்கிறது கொஞ்சம் குறைத்தால் நன்றாக (?) இருக்கும் என்றார்.
அதற்கு பதிலளித்த இராஜகுமாரன் , “ இனிமேல் எதுவும் செய்ய முடியாது, இதுதான் என் படம் பார்க்கிறவங்க பாருங்க. என் படத்தை பார்த்து விமர்சனம் செய்யணும்னா அவங்க ஒரு 10 வருஷம் யார் கிட்டயாவது உதவி இயக்குனரா இருந்திருக்கணும், இல்லை ஒரு 10 படமாவது இயக்கியிருக்கணும். என் படத்தை பார்க்க தியேட்டருக்கு யாருமே வரலைன்னாணும் பரவாயில்லை, என் படத்தை நான் 100 நாள் ஓட்டுவேன், ” என அதிகமான அடக்கத்துடன் பேச, அதற்கு அந்த மூத்த பத்திரிகையாளர் , “ அப்படின்னா, நீங்க எங்களுக்கு இந்த படத்தை ஏன் போட்டுக் காட்டினீங்க, நீங்களே பார்த்துக்க வேண்டியதுதானே, ” என பதிலுக்கு சொல்லி விட்டு விருட்டென்று சென்று விட்டார்.
இராஜகுமாரன் அவர்களே, உங்கள் படத்தை விமர்சிக்க நீங்கள் சொன்னபடி இருக்க வேண்டுமென்றால் அதை உங்கள் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களில் கூட ஒரு சிலர் மட்டுமே விமர்சிக்க முடியும்.
உங்கள் முதல் படமான ‘நீ வருவாய் என’ படத்தை பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்களும் ஒட்டு மொத்தமாக பாராட்டி எழுதியதால்தான் அந்த காலகட்டத்தில் அந்த படமும் ஓடி வெற்றி பெற்று உங்களையும் ஒரு இயக்குனர் என தமிழ்த் திரையுலகமும், ரசிகர்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை நீங்கள் எப்படி மறந்து போனீர்கள்.
அதன் பின் நீங்கள் இயக்கிய (?) விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் போன்ற படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை நீங்கள் என்றைக்காவது சிந்தித்துப் பார்த்ததுண்டா.
ஏறக்குறைய 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நீங்களே சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்து 50 நாட்களுக்கும் மேலாக நாளிதழ்களில் தினசரி விளம்பரம் கொடுத்து இப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முடிவெடுத்த நீங்கள், இந்த படத்தை ரசிகர்கள் வரவில்லையென்றாலும் 100 நாட்கள் படத்தை ஓட்டுவேன் என்று சொன்னதன் அர்த்தம் (?) புரியவில்லை.
அப்படி எந்த விமர்சனமும் இல்லாமலே இந்த படம் 100 நாட்கள் ஓடும் என்றால் இந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவது தேவையற்ற ஒன்று என்றே நாங்கள் நினைக்கிறோம்.
உங்கள் படம் 100 நாட்கள் மட்டுமல்ல அதையும் கடந்து வெள்ளி விழா கொண்டாட எங்களது மனப் பூர்வமான வாழ்த்துகள்…
நன்றி… வணக்கம்….
Comments
Post a Comment