555-க்காக மொட்டை போட்ட பரத்!!!

Tuesday,2nd of April 2013
சென்னை::தமிழ் சினிமா ரொம்பவே மாறி வருகிறது. எந்த ஒரு காட்சியும் ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்து நடிக்கவும் தயாராகிவிட்டனர் நம்ம ஹீரோக்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜீத், விஷ்ணுவர்தன் படத்தில் நடித்தபோது விபத்தில் சிக்கி ஆபரேஷன் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். மற்றொரு நடிகர் ஷாம் 6 படத்திற்காக ராத்திரி பகல் தூங்காமல் கண்கள் எல்லாம் வீங்கியபடி ரியலாக கொண்டு வந்து நடித்தார். இப்போது அந்தவரிசையில் நடிகர் பரத்தும் சேர்ந்துள்ளார்.

சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ போன்ற படங்களை இயக்கிய சசி, 555 என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்காக பரத் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார். இப்படத்தில் பரத்துக்கு மூன்று கேரக்டராம், அதாவது சாக்லேட் பாய் போன்று ஒரு கேரக்டரும், தாடி-மீசையுடன் ஒரு கேரக்டரும், மொட்டை தலையுடன் ஒரு கேரக்டரும் வருகிறது. இந்த மூன்று தோற்றத்திற்காக பரத் த‌ன்னை தயார்படுத்தி நடித்துள்ளார்.

இதுகுறித்து பரத் கூறியுள்ளதாவது, கடந்த ஒரு வருடமாக தாடி–மீசை மற்றும் தலைமுடியை நீளமாக வளர்த்து வந்தேன். வாழ்க்கையை பறிகொடுத்த தோற்றம் வரவேண்டும் என்பதற்காக, பட்டினி கிடந்தேன். கடந்த ஒரு வருடமாக சரியான சாப்பாடு கிடையாது. ‘ஜிம்’மில் 6 மணி நேரம் கிடந்தேன். மொட்டையுடன் தோன்ற வேண்டும் என்பதற்காக தாடி–மீசையை எடுத்து, தலைமுடியை மொட்டை போட்டுக்கொண்டேன். ஒரு நோயாளி போன்ற தோற்றம் வேண்டும் என்பதற்காக, மொட்டை போடுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு, தண்ணீர் குடிப்பதைக் கூட நிறுத்தி விட்டேன். இதனால் 75 கிலோவாக இருந்த எனது எடை 64 கிலோவாக குறைந்துவிட்டது என்றார்.

Comments