Saturday,23rd of March 2013
சென்னை::தனது படங்களில் ஹீரோயிச பில்டப் காட்சிகளுக்கு திடீரென தடை போட்டிருக்கிறாராம் அஜீத். தமிழ் சினிமா என்றாலே ஹீரோயிசம்தான். இந்த பார்முலாதான் மற்ற தென்னிந்திய மொழி படங்களில் பின்பற்றப்பட்டது. இப்போது பாலிவுட்டும் கூட இந்த மோசமான பார்முலாவுக்கு அடிமையாகிக் கிடக்கிறது. தமிழில் ரஜினி, கமல், அஜீத், விஜய், சிம்பு, தனுஷ் என எல்லோருமே ஹீரோ பில்டப் படங்களில் நடிக்கிறார்கள். படத்தின் தலைப்பிலிருந்து, வசனங்கள், பாடல்கள் என எல்லாவற்றிலும் ஹீரோ கேரக்டருக்கான பில்டப்பை புகுத்தவே நடிகர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கிறது. ஆனால் திடீரென இந்த பார்முலாவை தனது படங்களில் மாற்ற முடிவு செய்திருக்கிறார் அஜீத்.
இப்போது விஷ்ணுவர்தன் இயக்கும் வலை, சிவா இயக்கும் படங்களில் அவர் நடிக்கிறார். இரண்டு படங்களிலும் ஹீரோயிச பில்டப் காட்சிகள், பஞ்ச் டயலாக், மற்ற ஹீரோக்களை பர்சனலாக தாக்கும் வசனம், ஹீரோவை துதித்து பாடுவது உள்பட எந்த காட்சியும் இடம்பெறக்கூடாது என அவர் உத்தரவு போட்டுள்ளாராம். பில்லா 2 வரை கூட ஹீரோயிச படங்களில்தான் அஜீத் நடித்து வந்தார். ஆனால் இப்போது அதிலிருந்து மாறுபட்டிருக்கிறார். இந்த பாணியை ரஜினி உள்பட எல்லா முன்னணி ஹீரோக்களும் பின்பற்றலாம். அப்படி செய்தால் தமிழ் சினிமாவில் புது டிரெண்ட் உருவாகும். முக்கியமாக ஹீரோக்களின் கட்அவுட்களுக்கு அபிஷேகம் செய்து, அவர்களை தெய்வமாக்கி கொண்டாடும் ரசிகர்களின் மனநிலையில் மாற்றம் வரலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Comments
Post a Comment