Sunday,3rd of March 2013
சென்னை::தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினருக்கும், கேயார் அணியினருக்கும் நேற்று திடீர் மோதல் ஏற்பட்டது.தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2011ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரன் (எஸ்.ஏ.சி) தலைமையிலான புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். ‘எஸ்ஏசி, சங்க பணிகளை ஒழுங்காக கவனிப்பதில்லை என்று கேயார் தலைமையிலான அணி குற்றம் சாட்டி வந்தது. பிறகு கேயார் அணி, பொதுக்குழுவை கூட்டச் சொன்னது. அதற்கு எஸ்ஏசி தரப்பு மறுக்கவே, கேயார் அணி கோர்ட்டுக்கு சென்றது. சங்க விதிகளின்படி பொதுக்குழுவை கூட்டும்படி கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் எஸ்ஏசி தலைமையிலான நிர்வாகம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதை எதிர்த்து எஸ்ஏசி தரப்பு கோர்ட்டுக்கு சென்றதால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் எஸ்ஏசி நிர்வாகத்தின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
ஆனால் எஸ்ஏசி அணி நிர்வாகிகள் பதவி விலகாமல் இருந்தனர்.தற்போது சென்னை மாவட்ட பதிவாளர், எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் செயல்படும் தகுதியை இழந்து விட்டது. சங்கம் தொடர்பான வங்கி கணக்குகளை ஒப்படைக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் கேயார் அணியினர், சங்க வளாகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். சங்கத்தில் கட்டிட பணிகள் நடப்பதால் திறந்த வெளியில் இக்கூட்டம் நடந்தது. பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த கேயார், ‘‘எஸ்ஏசி தலைமையிலான நிர்வாகிகள் செயல்பட தடைவிதித்து வங்கி கணக்கை பதிவுத்துறை கேட்டுள்ளது. இதற்கு பிறகும் அவர் பதவியில் நீடிக்கிறார். அவர் சங்க ஆவணங்களையும், கணக்குக ளையும் பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அவர் அணியை எதிர்த்து நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். தயாரிப்பாளர்களின் நலனை காப்போம்’’ என்றார்.பேட்டி நடந்து கொண்டிருந்தபோது பாபுகணேஷ் தலைமையில் வந்த சிலர், நீங்கள் இங்கே பேட்டி கொடுக்கக் கூடாது என்று கூறி சத்தம் போட்டனர். இதனால் கேயார் அணியினர் ஆத்திரம் அடைந்தனர்.
திடீரென இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். சிலர் அடிதடியில் இறங்கினர். சிறிது நேரம் நடந்த இந்த மோதலுக்குப் பிறகு எஸ்ஏசி அணியைச் சேர்ந்தவர்கள் காரில் ஏறி சென்றுவிட பரபரப்பு அடங்கியது. பிறகு நிருபர்களிடம் பேசிய கேயார், “நாங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை சொல்கிறோம். அதேபோல எஸ்.ஏ.சந்திர சேகரனும், தாணுவும் தங்கள் தரப்பு நியாயங்களை சொல்ல உரிமை உண்டு. ஆனால் அவர்கள் அடியாட்களை கொண்டு எங்களை தாக்க நினைக்கிறார்கள், பயமுறுத்த நினைக்கிறார்கள். அவர்கள் மீது போலீசில் புகார் செய்வோம்’’ என்றார்.எஸ்ஏசி தரப்பில் வந்திருந்தவர்கள் கூறும்போது, “பதிவாளர் கடிதம் இறுதியானதல்ல. நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். எதெற்கெடுத்தாலும் பிரச்னை செய்து சங்கத்தை முடக்க நினைக்கிறார்கள். 24ம் தேதி சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டுவது என உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த பொதுக்குழுவில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதற்குள் அவசரப்பட்டு இவர்கள் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். அதை தட்டிக்கேட்ட எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்’’ என்றனர்.தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த இந்த மோதல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment