Friday,22nd of March 2013
சென்னை::'தேவதையை கண்டேன், 'திருவிளையாடல் ஆரம்பம்', 'மலைக்கோட்டை' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய பூபதி பாண்டியன், விஷாலுடன் 'பட்டத்து யானை' படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார்.
பூபதி பாண்டியன் படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்றாலும், இந்த படத்தில் நகைச்சுவை நெடு ரொம்ப அதிகமாகவே இருக்கும். காரணம் இந்த படத்தில் சந்தானமும் இருக்கிறார்.
பூங்காவனம் என்ற பெயரில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார் சந்தானம். "சீசனுக்கு சீசன் மட்டும் சமையலில் பரபரப்பாக இருந்து கொண்டு ஊர் ஊராகப் போவதற்கு ஒரே இடத்தில் ஓட்டல் வைத்து சமையல் திறனைக் காட்டி மக்களுக்குப் பசியாற்றி ஆண்டு முழுவதும் பிசியாக இருப்போம்" என்று யோசனை சொல்கிறார் உடன் இருக்கும் விஷால். நல்ல திட்டமாக இருக்கிறதே! என்று ஓட்டல் வைக்க முடிவு எடுக்கிறார் சந்தானம். அப்படி அவர்கள் காரைக்குடியிலிருந்து திருச்சிக்கு புறப்படுகிறவர்கள் ஓட்டல் வைத்தார்களா? இடையில் என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்பதையே முழு நீள நகைச்சுவை விருந்தாக பந்தி வைத்து பரிமாறுகிறார் பூபதி பாண்டியன். பந்தியிலையில் வைக்கும் போனஸ் இனிப்பாக விஷால்- ஐஸ்வர்யா அர்ஜுன் காதல் கதை அமைந்திருக்குமாம்.
இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க நாயகியாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகிறார். படம் முழுக்க வந்து காமெடியில் வெளுத்து வாங்குகிறார் சந்தானம். இவர்கள் தவிர சீதா,ஜெகன்,பட்டிமன்றம் ராஜா,மனோபாலா,சபேஷ் கார்த்திக்,'வட போச்சே' சரித்திரன்,சித்ரா லெட்சுமணன், கிருஷ்ண மூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன்,மயில் சாமி,ஜான் விஜய்,பெசன்ட் நகர் ரவி,மும்பை வில்லன் விஜய் சர்மா,அஜய் சேனா என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.
அர்ஜுன் மகளை நடிக்க வைத்த அனுபவம் பற்றிக் கூறிய பூபதி பாண்டியன், "ஒரு நடிகரின் மகளை நடிக்க வைப்பதில் மகிழ்ச்சி,பெருமை. சுந்தர்.சி.என்னைப் பற்றி நடிகர் அர்ஜுனிடம் கூறும் போது பூபதி பாண்டியன் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதை அமைப்பவர்.எனவே அவர் படத்தில் அறிமுகம் செய்வது நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா அர்ஜுன் தெளிவாக இருக்கிறார்.அப்பா,அம்மா,மட்டுமல்ல தத்தாகூட நடிகர்.இவர் மூன்றாவது தலை முறையாக நடிக்க வந்திருக்கிறார்.எளிதில் புரிகிறது.புரியாத காட்சிகளை நடித்துக் காட்ட சொல்வார். சினிமா குடும்பத்துப் பெண்ணை நடிக்க வைத்த போது ஒரே குடும்பம் போல உணர்ந்தோம். எல்லோருமே ஐஸ்வர்யா மீது தனி பாசம் காட்டினார்கள். நன்றாக கவனித்துக் கொண்டார்கள். இது பற்றி அர்ஜுன் சார் நன்றியுடன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்." என்று தெரிவித்தார்.
பட்டத்து யானை' தலைப்பு பற்றி கேட்டதற்கு, "இப்படம் பலருக்கும் உயரம் காட்டி பலபடிகள் மேலேற்றி வைக்கும் படி இருக்கும் படம் பார்த்தால் தலைப்பின் பொருள் விளங்கும் என்கிறார் பூபதி பாண்டியன்.
விஷாலுக்கு அவரது திரை வாழ்வின் பரப்பை அதிகப்படுத்தும் வகையிலும் சந்தானத்துக்கு இன்னொரு பரிமாணம் காட்டும் வகையிலும் இப்படம் இருக்குமாம். ஐஸ்வர்யாவுக்கு அழுத்தமான அறிமுகமாகவும் அமையும் என நம்பிக்கை
தெரிவிக்கிறது படக்குழு.
மயில்சாமி ஜாக்பாட் என்கிற திருடனாக வருகிறார். கதை நகர சாவி கொடுப்பதே இந்தப் பாத்திரம் தான். ஒரு பெண் குழந்தை அசத்தலாக நடித்துள்ளது.
குளோபஸ் இன்போ டெய்ன்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.வைத்தி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்க நா.முத்துக்குமார், மதன் கார்கி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.
Comments
Post a Comment