திருமணம் விரைவில் நடக்கும்: சித்தார்த்!!!

Tuesday,26th of March 2013
சென்னை::சித்தார்த் தமிழில் ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானார். ‘ஆயுத எழுத்து’, ‘180’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக உள்ளார்.

சமந்தா ‘பாணா காத்தாடி’, ‘நான் ஈ’ படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சித்தார்த்தும் சமந்தாவும் ‘ஐபர்தஸ்த்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. சமீபத்தில் இருவரும் குடும்பத்தினருடன் காளகஸ்தி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். அருகருகே உட்கார்ந்து ராகு, கேது பரிகார பூஜையும் செய்தார்கள். அப்போதுதான் இவர்கள் காதல் விஷயம் அம்பலமானது.

இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இதுகுறித்து சித்தார்த் அளித்த பேட்டி வருமாறு:- நான் திருமணத்துக்கு தயாராகிறேன். குழந்தை குடும்பம் என்று இருக்க ஆசை வந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிறைய பெண்களுடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை பொருட்படுத்தவில்லை. எனது குடும்பத்தினரும் அதை படிப்பது இல்லை.

சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொள்ளாமலேயே அவரைப் பற்றி எழுதுகிறார்கள். என் சொந்த வாழ்க்கை பற்றி மற்றவர்களுடன் பேச நான் விரும்பவில்லை. எனக்கு பெரிய ரசிகராக இருந்தாலும்கூட அவருக்கு என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட உரிமை இல்லை.

ரசிகர் டிக்கெட் எடுத்து படம் பார்க்க போகலாம். பிடித்து இருந்தால் பத்து பேருக்கு சொல்லலாம். பிடிக்காவிட்டால் படம் பார்க்க வேண்டாம் என்று நூறு பேருக்கு சொல்லலாம். அவ்வளவுதான். மற்றபடி நடிகரின் சொந்த வாழ்க்கையை அறிய உண்மையான ரசிகன் ஆர்வம் காட்டமாட்டான்.

இவ்வாறு சித்தார்த் கூறினார்.

Comments