Saturday,16th of March 2013
சென்னை::"பாய்ஸ்" படத்தில் 5 பாய்ஸ்களில் குண்டு பாயாக இருந்தவர் நகுல். 5 வருட இடைவெளியில் ஆளே மாறி ஸ்லிம்மாகி "காதலில் விழுந்தேன்" படத்தில் ரீ-எண்ட்ரி ஆனார். கந்தகோட்டை, மாசிலாமணி, படத்தில் நடித்தார். அதன் பிறகு ஆளையே காணவில்லை. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது "வல்லினம்" படத்தில் கூடைப்பந்து வீரராகவும், "நான் ராஜாவாக போகிறேன்" படத்தில் கிக் பாக்சராகவும் வந்து நிற்கிறார். தேவயானியின் தம்பி என்ற அடையாளத்தை வைத்துக் கொள்ளாமல் தன் சுய அடையாளத்தோடு வலம் வர விரும்பும் நகுல் அளித்த சிறப்பு பேட்டி:
* திடீர் திடீரென்று காணாமல் போய்விடுகிறீர்களே?
நான் எங்கேயும் போகவில்லை. இங்குதான் இருக்கிறேன். வல்லினம் புராஜக்ட்ல மட்டும் ரெண்டு வருஷம் இருக்கேன். காரணம் படத்தோட ஸ்கிரிப்ட் அப்படி. பேஸ்கட்பால் பிளேயரா நடிக்கிறேன். பேசிக்கா நான் கீ போர்ட் பிளேயர். விளையாட்டு எனக்கு சுத்தமா வராது. இருந்தாலும் படத்துக்காக 6 மாசம் கிரவுண்டிலேயே கிடந்து பிராக்டிஸ் பண்ணினேன். இப்போ நான் ஸ்டேட்டுக்காக விளையாடுற அளவுக்கு தேறிட்டேன். படத்தையும் அறிவழகன் சார் பார்த்து பார்த்து செதுக்குறார். படம் ஒரளவுக்கு வளர்ற வரைக்கும் வெளியில சொல்ல வேண்டாமுன்னு சொல்லியிருந்ததால நானும் அதை ஃபாலோ பண்ணினேன். அது இடைவெளி வந்துட்ட மாதிரி தெரியுது.
* நான் ராஜாவாக போகிறேன் எப்படி?
"வல்லினம்", "நான் ராஜாவாக போகிறேன்" இரண்டுமே ஆக்ஷன் படங்கள்தான். ஆனால் ரெண்டுக்குமே வித்தியாசம் இருக்கு. வல்லினத்துல ஆக்ஷன் பீல் இருக்கும். நேரடியான ஆக்ஷன் இருக்காது. நான் ராஜாவாக போகிறேன்ல சும்மா அடிதடிதான். பக்காவான லோக்கல் கமர்ஷியல் படம். இந்த ரெண்டுக்கும் பிறகு நகுலை வேற மாதிரி பார்ப்பீங்க?
* ஸ்பாட்டுல பரபரன்னு இருக்கீங்க? மீடியாக்களை பார்த்து பம்முறீங்களே?
உண்மைதானுங்க அது ஏன்னு தெரியல. மீடியான்னாலே கொஞ்சம் பயம்தான். பயம்னு சொல்றத விட வெட்கம்னு சொல்லலாம். மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கிற அளவுக்கு நான் இன்னும் எதுவும் சாதிக்கலைங்கற வெட்கம்தான் அது. இந்த ரெண்டு படங்களுக்குப் பிறகு நிச்சயம் அந்த வெட்கம் போயிடும்னு நினைக்கிறேன்.
* சினிமால பிரண்ட்ஸ் யார்?
உண்மைய சொன்னா எனக்கு யாருமே பிரண்ட்ஸ் கிடையாது. பாய்ஸ்ல நடிச்ச தமன், பரத், சித்தார்த் இவுங்களோட டச்சுல இருக்கேன். மற்றபடி பார்டி, டேட்டிங்னு எங்கேயும் போறதில்லை. நான் வீட்டுப் பறவை. வேலை, வேலை முடிஞ்சா வீடு. வீட்டுலதான் இருப்பேன். இல்லேன்னா ஜிம்முல இருப்பேன். அதுவும் இல்லேன்னா படம் பார்ப்பேன். இதைத் தவிர வேறெதுவும் கிடையாது. அதனால பிரண்ட்சுங்களும் அதிகம் கிடையாது.
* அடுத்த படம்...?
கே.எஸ்.அதியமான் இயக்கும் "அமளி துமளி" படம் போயிட்டிருக்கு. நான் ஸ்வாதி, சாந்தனு நடிக்கிறோம். ஜாலியான காமெடி படம். அக்காவை "தொட்டாச்சினுங்கி" படத்துல அறிமுகப்படுத்தின இயக்குனரு அதியமான் சார்... அவர் படத்துல நடிக்கிறது சந்தோஷமா இருக்கு.
* அக்காவுடன் இணைந்து நடிப்பீங்களா?
அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். சும்மா அக்கா தம்பி கேரக்டரா இல்லாம பவர்புல் ஸ்டோரி அமைஞ்சா சேர்ந்து நடிப்போம். போட்டிபோட்டு நடிப்போம்.
* அக்கா பெயரை அதிகமா யூஸ் பண்றதில்லையே ஏன்?
எப்பவுமே சொந்தக்கால்ல நிக்கணுங்றதுதான் எங்கம்மா சொல்லிக் கொடுத்தது. அக்காவும் அப்படித்தான் நின்னாங்க. எந்த பேக்ரவுண்டும் இல்லாமத்தான் 75 படங்கள் நடிச்சாங்க. நானும் அப்படித்தான் யார் சிபாரிசும் உதவியும் இல்லாம என்னோட சொந்த முயற்சியில வளரணும்னு நினைக்கிறேன். அக்கா நிழலில் நிற்காமல் சொந்தக் காலில் நின்று ஜெயிப்பேன். பாய்ஸ் படத்துல நடிக்கிறப்போ 90 கிலோ வெயிட் இருந்தேன். காதலில் விழுந்தேன்ல நடிக்கிறப்போ 52 கிலோ வெயிட் இந்த மாற்றத்தை நானே ஏற்படுத்திக்கிட்டது. அக்காவை நான் ரொம்ப நேசிக்கிறேன். அது வீட்டுக்குள்ள மட்டும். நான் ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறதுக்கு காரணமும் அக்காதான். "என்னடா இப்படி மொக்கையா ஒரு படம் பண்ணியிருக்கே"ன்னு அவுங்க சொல்லிடக்கூடாதுன்னு நினைக்கிறேன்.
* கிசுகிசுவில மாட்டவில்லையே...?
நான் இன்னும் சின்னப் பையன்தாங்க. இன்னும் பெரிய பையனா ஆனதும் நானும் நிஜம்மா காதலில் விழுவேன். அப்போ நிறைய கிசு கிசு வரும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
Comments
Post a Comment