வள்ளி, விருமாண்டிக்குப் பின் ரஜினி, கமல் படங்களில் இசையமைக்காதது ஏன்? – இளையராஜா பதில்!!!

Thursday,28th of March 2013
சென்னை::வள்ளி, விருமாண்டி படங்களுக்குப் பிறகு ரஜினி, கமல் படங்களில் பணியாற்றாதது ஏன் என இசைஞானி இளையராஜா பதில் அளித்துள்ளார்.

ரஜினி, கமல் நடித்த அதிகபட்ச படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. இவர்கள் இணைந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் காலத்தை வென்றவை. இன்றும் புதிதாகவே இருப்பவை.

ஆனால் ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த வள்ளிக்குப் பிறகு, இருவரும் இணையவில்லை. இத்தனைக்கும் வள்ளியின் மிகப் பெரிய பலமாக நின்றது இளையராஜாவின் இசை.

அதேபோல, கமல் இயக்கி நடித்த விருமாண்டிக்குப் பிறகு கமல் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. விருமாண்டியின் பெரிய பலமும் ராஜாவின் இசைதான்.

இதுபற்றி குமுதத்தில் இளையராஜாவைக் கேளுங்கள் பகுதியில் வாசகர் கேள்விக்கு, இளையராஜா இப்படி பதிலளித்துள்ளார்.

விருமாண்டி”க்கு பின் அவரும், “வள்ளி”க்குப் பின் இவரும் உங்களோடு சேரவில்லையே? அதுபற்றி எண்ணியதுண்டா ?

என்னை வைத்துதான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஏன் அப்படி யாரிடமும் ஒப்பந்தம் போட்டது இல்லை. அவர்கள் இந்தப் படத்திற்கு “இளையராஜா”வின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது.

காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும்?

எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம்.

ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது. என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை.
இப்படிக் கூறியுள்ளார் இளையராஜா.

Comments