கோடிகளில் புரளும் திரை நட்சத்திரங்கள்! ரஜினி-அனுஷ்கா டாப்!!!

Thursday,28th of March 2013
சென்னை::இன்றைக்கு உடனடி கோடீசுவரனாக இருக்கும் ஒரே வழி, சினிமா நட்சத்திரமாகி விடுவதுதான். அதனால்தான், ரியல் எஸ்டேட் புள்ளிகளும் திடீர் பணக்காரர்களும் பணத்தை மடியில் கட்டிக் கொண்டு படம் எடுக்க வருகிறார்கள்.
அவர்களது வாரிசுகளை ஹீரோக்களாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அடுத்த நாளே அவர் கோடீஸ்வரன்தான். இதற்கு தற்போதைய உதாரணங்கள் பவர் ஸ்டாரும், விஜய் சேதுபதியும். பவர் பணம் கொடுத்து நடித்தார். பணம் போட்டு சொந்தப் படம் எடுத்தார். ஒரு பட வெற்றி அவரை இழந்த பணத்தை மீட்க வைத்து கோடீஸ்வரனாக்கி விட்டது. கூத்துப் பட்டறையில் கிளர்க்காக இருந்தவர் விஜய்சேதுபதி. குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் வெறும் 20 ஆயிரம் சம்பளத்தில் "தென்மேற்கு பருவக்காற்று" படத்தில் நடித்தார். "பீட்சா"வின் வெற்றிக்கு பிறகு இப்போது அவர் கையில் பத்து படங்கள். "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்", "பீட்சா" படங்களுக்கு எட்டு லட்சம் சம்பளம் வாங்கியவர். இப்போது கேட்பது ஒண்ணேகால் கோடி.

முதலிடத்தில் ரஜினி

இந்த சம்பள விஷயத்தில் முதலிடத்தில் இருப்பது எப்போதும் போல சூப்பர் ஸ்டார் ரஜினிதான். "எந்திரன்" படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் 23 கோடி. "கோச்சடையான்" மகள் படம் என்பதால் சம்பளம் வாங்காமல் நடிக்கிறார். படத்தின் பட்ஜெட்டில் ரஜினியின் சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும். ரஜினி அடுத்து வெளி பேணர்களில் நடித்தால் 50 கோடி சம்பளம் தர பல நிறுவனங்கள் தயாராக இருக்கிறது.

இரண்டாம் இடம் கமலுக்கு

கமலுக்கு இரண்டாவது இடம். கமலை பொறுத்தவரை இவ்வளவு தான் சம்பளம் என்று பிக்ஸ் பண்ணிக்கொள்ள மாட்டார். வெற்றிகளுக்கு ஏற்ப ஏற்றி இறக்கி வாங்குவார். "தசாவதாரம்" படத்துக்கு 10 கோடி சம்பளம் கொடுத்தார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அடுத்து அவர் நடித்த உன்னைபோல் ஒருவனும், விஸ்வரூபமும் சொந்தப் படங்கள். விஸ்வரூபம் வெற்றி பெற்று விட்டதால் தற்போது தன் சம்பளத்தை 25 கோடியாக பிக்ஸ் செய்திருக்கிறார்.

மூன்று - நான்கில் விஜய் - அஜித்

10 கோடி வரை சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த விஜய் "துப்பாக்கி" ஹிட்டுக்கு பிறகு 15 கோடியாக உயர்த்தி விட்டார். "தலைவா"வுக்கும் "ஜில்லா"வுக்கும் உயர்த்திய சம்பளத்தைத்தான் வாங்குகிறார். 2014ல் தன் சம்பளத்தை 20 கோடியாக உயர்த்துவார். ஒருவேளை தலைவாவும், ஜில்லாவும் சரியாக போகவில்லை என்றால் மீண்டும் 10 கோடியிலிருந்து கணக்கை துவக்குவார்.

* கிட்டத்தட்ட விஜய் ரேன்ஞ்சுதான் அஜீத்தும். 8 முதல் 12 கோடி வரை ஆளுக்கு தக்கபடி பெற்றுக் கொள்வார் "பில்லா 2" வுக்கு அவர் வாங்கிய சம்பளம் 12 கோடி. ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் தற்போது நடித்து வரும் படத்துக்கு சம்பளம் கேட்கவில்லை. படத்தின் லாபத்தில் இத்தனை சதவிகிதம் கொடுங்கள் என்று பேசியிருப்பதாக தகவல். காரணம் தயாரிப்பாளர் இப்போது சம்பளம் கொடுக்கும் நிலையில் இல்லை. அடுத்து விஜயா புரொடக்ஷன் தயாரிக்கும் படத்துக்கு 15 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

* நடிகர்களில் சம்பள விஷயத்தில் சூர்யாவும், கார்த்தியும் மிகவும் புத்திசாலிகள். தெலுங்கு பக்கம் தங்கள் படம் நன்றாக ஓடும் என்பதால் அதற்கும் சேர்த்து சம்பளம் பேசுவார்கள். அல்லது தெலுங்கு ரைட்சை தனியாக வாங்கிக் கொண்டு அதை பலகோடிக்கு விற்று விடுவார்கள். இது தவிர சூர்யா படத்துக்கு 7 முதல் 10 கோடி வரை வாங்குகிறார். கார்த்தி 5 முதல் 7 கோடி வாங்குகிறார். விளம்பர வருமானங்கள் தனி. ஆக.... இப்போது சினிமாவில் அதிகம் சம்பாதிப்பது சிவகுமார் பேமிலிதான்.

* சூர்யாவைப் போலவே தெலுங்கு ரைட்சையும் சேர்த்து வாங்கும் நடிகர் விஷால். 3 முதல் 5 கோடி சம்பளம் வாங்கும் விஷால் கூடவே தெலுங்கு ரைட்சை வாங்கி அதனையும் 3 கோடி வரைக்கும் விற்றுக் கொள்வார். ஆர்யாவின் சம்பளம் விஷால் அளவுதான். ஆனால் தெலுங்கு ரைட்ஸ் கேட்பதில்லை. "சேட்டை" படத்துக்கு நாலரை கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

* விக்ரம் 10 கோடியை தாண்டித்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்திய அவரது படங்கள் சரியாக போகாததால் கொஞ்சம் குறைத்துக் கொள்ள முன்வந்திருக்கிறார். இருந்தாலும் ஷங்கரின் "ஐ" படத்துக்கு அவர் பெற்றுள்ள சம்பளம் 11 கோடி. சிம்புவின் சம்பளம் 5 முதல் 7 கோடி. கிட்டத்தட்ட தனுஷின் சம்பளமும் சிம்பு அளவுதான். ஆனால் தனுஷிடம் ஒரு நல்ல பழக்கம், நல்ல படம் நல்ல கதை என்றால் சம்பளத்தை பெரிதாக கருத மாட்டார். "மரியான்" படத்தில் குறைந்த சம்பளம் பெற்றே நடித்து வருகிறார். ஜீவாவின் சம்பளம் 5 கோடிக்கு உள்தான். சமீபத்திய படங்களின் தோல்வியால் 3 கோடிக்கு இறங்கி வந்திருக்கிறார். ஜெயம்ரவியின் சம்பளம் 3 முதல் 5 கோடி.

* காமெடியன்களில் அதிகம் சம்பளம் வாங்குவது இன்றைய நிலவரப்படி சந்தானம். ஒரு நாளைக்கு 5 முதல் 7 லட்சம். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சத்தியமா நம்புங்க பவர் ஸ்டார். ஒரு நாளைக்கு 3 முதல் 5 லட்சம் வாங்குகிறார். வடிவேலு முன்பு தினசரி சம்பளம் வாங்கினார். இப்போது ஒரு படத்துக்கு இத்தனை கோடி கொடுத்து விடுங்கள் என்கிறாராம். குணசித்திர நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குகிறவர் பிரகாஷ்ராஜ். காட்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை பெற்றுக் கொள்வார்.

நடிகைகளில் அனுஷ்கா-நயன்தாரா டாப்

நடிகைகளில் கோடியை தாண்டி சம்பளம் பெறுகிறவர்கள் நயன்தாரா, அனுஷ்கா, இலியானா ஆகியோர். இப்போது இந்த பட்டியலில் அமலாபாலும், காஜல் அகர்வாலும், சமந்தாவும், ஸ்ருதியும் இணைந்திருக்கிறார்கள். த்ரிஷா எப்போதும் ஒரே மாதிரியாக சம்பளம் பெறுவார். தமிழ் என்றால் 60 லட்சமும், தெலுங்கு என்றால் 75 லட்சமும் பெற்றுக் கொள்வார். அஞ்சலி 50 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.

Comments