தேசிய திரைப்பட விருது அறிவிப்பு; வழக்கு எண், விஸ்வரூபம், பரதேசி படங்களுக்கு விருதுகள்!

Wednesday,20th of March 2013
சென்னை::இந்திய அளவில், சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் திரைப்படங்களுக்கு, ஐந்து தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. கடந்த, 2012ம் ஆண்டில் வெளியான, சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகளை, பாசு சட்டர்ஜி தலைமையிலான, தேசிய திரைப்பட தேர்வுக் குழுவினர் அறிவித்தனர்.

சிறந்த நடிகர்: சிறந்த திரைப்படமாக, இந்தி படமான, "பான் சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருதுக்கு, இந்த படத்தில் நடித்த, இந்தி நடிகர், இர்பானும்; மராத்தி மொழியில், "அனுமாதி என்ற படத்தில் நடித்த, விக்ரம் கோகலேவும், தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சிறந்த நடிகை: சிறந்த நடிகையாக, "தாக் என்ற, மராத்தி மொழி படத்தில் நடித்த, உஷா ஜாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த இயக்குனராக, மராத்தி இயக்குனரான, சிவாதி லோடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

துணை நடிகை: சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு, "விக்கி டோனர் என்ற இந்தி மொழி படத்தில் நடித்த, டோலி அலுவாலியாவும், மலையாள நடிகை, கல்பனாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சிறந்த பாடகர்கள்: சிறந்த பின்னணி பாடகருக்கான விருதுக்கு, "சிட்டகாங் படத்தில் பாடிய, சங்கர் மகாதேவனும், சிறந்த பின்னணி பாடகிக்கான விருதுக்கு, மராத்தி பாடகி, ஷமிதாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது, "கஹானி படத்துக்காக, சுஜோய் கோஷூக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருதுக்கு, நம்ரதா ராவ், தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுற்றுச்சூழலை வலியுறுத்தும் படத்துக்கான சிறந்த விருது, "பிளாக் பாரஸ்ட் என்ற, மலையாள படத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படத்துக்கான சிறந்த விருது, தனிச்சல்லஞ்சன் என்ற, மலையாள படத்துக்கும் கிடைத்துள்ளது.

சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதுக்கு, மராத்தி இசைஅமைப்பாளர், ஷைலேந்திர பார்வேயும், சிறந்த பின்னணி இசை அமைப்பாளருக்கான விருதுக்கு, மலையாளத்தின் பிஜி பாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் படங்கள்

விஸ்வரூபத்துக்கு இரண்டு விருதுகள் : தமிழ் திரைப்படங்களுக்கு, ஐந்து தேசிய விருதுகள் கிடைத்து உள்ளன. கமல்ஹாசனின், "விஸ்வரூபம் படத்துக்கு, நடனம் அமைத்த, பிர்ஜு மஹராஜுக்கு, சிறந்த நடன இயக்குனர் விருது கிடைத்துள்ளது. இந்த படத்தின், கலை இயக்குனர்களாக பணியாற்றிய, லால்குடி என். இளையராஜா, பொன்டவி தாவிபசாஸ் ஆகியோர், சிறந்த கலை இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு எண் 18/9 : பாலாஜி சக்திவேல் இயக்கிய, "வழக்கு எண் 18/9 என்ற படத்துக்கு, ஒப்பனை கலைஞராக பணியாற்றிய, ராஜா, சிறந்த ஒப்பனை கலைஞராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படம், தமிழில், சிறந்த மாநில மொழி படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பரதேசி : சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான விருதுக்கு, "பரதேசி படத்திற்கு பணியாற்றிய, பூர்ணிமா ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாலாஜி சக்திவேல் மகிழ்ச்சி: "வழக்கு எண் 18/9 பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறியதாவது:கதையை வடிவமைத்தபோதே, இது வர்த்த ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும், அதே நேரம் விருதும் கிடைக்க வேண்டும் என, நினைத்தேன். மாநில மொழி படத்திற்கான விருது, கிடைத்ததில் சந்தோஷம். ஒப்பனை கலைஞர் ராஜாவுக்கும், விருது கிடைத்துள்ளது, சந்தோஷத்தை அதிகப்படுத்தி உள்ளது. இவ்வாறு, பாலாஜிசக்திவேல் கூறினார்.

பூர்ணிமா நெகிழ்ச்சி: "பரதேசி படத்திற்கு, ஆடை வடிவமைப்பு செய்த, பூர்ணிமா ராமசாமி கூறியதாவது: இயக்குனர் பாலா, கதையை கூறி, தேவையான ஆடைகளை தயார் செய்யும்படி கூறியபோது, புதிய ஆடைகளை, பழைய ஆடைகளாக மாற்றினேன். பழைய ஆடைகளையும் வாங்கி வந்தேன். வேலை சிரமாக இருந்தாலும், ஆர்வத்துடன் செய்தேன். பாலா பாராட்டினார். தற்போது, மத்திய அரசும், பாராட்டி, விருது அளித்துள்ளது. இவ்வாறு, பூர்ணிமா ராமசாமி கூறினார்.

Comments