'ரெண்டாவது படத்தில்' ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வெங்கட் பிரபு - இனியா

Friday,22nd of March 2013
சென்னை::தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் உள்ள வெங்கட் பிரபு, சினிமாவில் நடிகராகத்தான் அறிமுகமானார். தற்போது பிஸியான இயக்குநராக இருந்தாலும், சில படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது கார்த்தி - ஹன்சிகாவை வைத்து 'பிரியாணி' என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, தமிழ்ப் படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கும் 'ரெண்டாவது படம்' படத்தில் ஒரு பாடலுக்காக நடனம் ஆடியுள்ளார். இதில் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக இனியாவும் நடனம் ஆடியிருக்கிறார்.

இந்த பாடலை 1980களில் பிரபலமான மெட்டில் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் கண்ணன். அந்தக் காலத்து ஸ்டைலிலேயே நடனமும் அமைத்திருக்கிறார் நடன இயக்குநர் கல்யாண்.

இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது, "‘ரெண்டாவது பட’த்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் எனக்கு நெருங்கிய நண்பர் என்பதால், இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவருடைய அன்பான அழைப்பின் பேரிலேயே இப்பாடலில் நடனமாட விருப்பம் தெரிவித்தேன்.

மேலும், ‘பிரியாணி’ படத்தைப் பற்றிக் கூறும்போது, தற்போதெல்லாம் நடிகர்களின் கால்ஷிட் தேதியை வாங்குவதைவிட நடிகைகளின் கால்ஷீட் வாங்குவதுதான் பெரும் கஷ்டமாக உள்ளது. பிரியாணி படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளோம். கார்த்தி ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார்.

அடுத்த மாதம் ஹன்சிகா மொத்வானியின் கால்ஷீட்டை வாங்கி வைத்துள்ளோம். ஆகையால், அவர் வந்தபிறகு கார்த்தி ‘பிரியாணி’ படத்தில் நடிப்பார். விரைவில் படப்பிடிப்பை முடித்து வரும் ஆகஸ்டில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த சம்மரில் ‘பிரியாணி’ கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு நல்ல விருந்தாகும் என நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.

Comments