சென்னை::4 ஆஸ்கர் விருதுகளை அள்ளியிருக்கிறது "லைஃப் ஆஃப் பை". ஹாலிவுட் படம் என்றாலும் இந்திய நட்சத்திரங்கள் நடித்து இந்தியாவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் நமக்கு கூடுதல் சந்தோஷம். அதிலும் நம் சென்னை பொண்ணு ஷரவந்தியும் அந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பது இன்னும் சந்தோஷம். ஆஸ்கார் விருது அறிவிப்புகள் வந்து கொண்டிருந்த நேரம் தன் தோழிகளுக்கு இனிப்புகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஷரவந்தி. அந்த மகிழ்ச்சியின் இடையில் அளித்த பேட்டி:
* நீங்க நடிச்ச படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைச்சிருக்கு எப்படி உணர்றீங்க ஷரவந்தி?
படத்துல நடிக்கும்போது இந்தப் படத்துக்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும்னு எல்லோருமே பேசிக்கிட்டாங்க. அந்த அளவுக்கு அந்தப் படத்துக்காக எல்லோரும் கஷ்டப்பட்டு உழைச்சாங்க. நான்கு விருகள் கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை. விளையாட்டு போட்டியில என்னோட டீம் ஜெயிச்சமாதிரி இருக்கு. நான் நடிச்ச முதல் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைச்சிருக்கு. இந்த வாய்ப்பு கோடியில ஒருத்தருக்குத்தான் கிடைக்கும். சந்தோஷத்துல மிதந்துக்கிட்டிருக்கேன்.
* எப்படி கிடைச்சுது இந்த வாய்ப்பு?
அது பெரிய கதைங்க. நான் அஞ்சு வயசுலேருந்தே அண்ணா நகர்ல உள்ள ஒரு நாட்டியாலயாவில் டான்ஸ் படிச்சிட்டிருக்கேன். லைப் ஆப் பை படத்துக்கு நல்லா டான்ஸ் ஆடத் தெரிஞ்ச 14 வயசுப் பொண்ண தேடியிருக்காங்க. சென்னையில உள்ள எல்லா டான்ஸ் ஸ்கூல்லேயும ஆடிசன் பண்ணியிருக்காங்க. எதுவுமே செட்டாகல அவங்களுக்கு. எங்க ஸ்கூல்ல அப்ரோச் பண்ணியிருக்காங்க. அவுங்க எங்க ஸ்கூல்ல யாருக்கும் சினிமால நடிக்க விருப்பம் இல்லைன்னு சொல்லியிருக்காங்க. அப்புறம் ஒருவழியா சம்மதிச்சு என்னோட போட்டோவையும், இன்னொரு மாணவியோட போட்டோவையும் கொடுத்திருக்காங்க. அதுல என்னை மட்டும் மேக்-அப் டெஸ்ட்டுக்காக தைவான் கூப்பிட்டாங்க. நானும் உடனே புறப்பட்டு போனேன். அங்கு மேக்-அப் டெஸ்ட் நடந்துச்சு. எல்லாம் முடிஞ்ச பிறகு நீங்க நாட்டுக்கு திரும்பிப்போங்க செலக்ட் ஆனா சொல்றோம்னு அனுப்பினாங்க. எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு. ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினேன். ஏர்போட்டுல இறங்கி வெளியில வந்த உடனேயே தைவான்லேருந்து போன் "நீங்க செலக்ட் ஆயிட்டீங்க"ன்னு.
* அப்பா அம்மா பற்றி...?
அம்மாவுக்கு பூர்வீகம் திருநெல்வேலி, பி.எஸ்.என்ல ஆபீசரா இருக்காங்க, அப்பாவோட பூர்வீகம் கிருஷ்ணகிரி பிசினஸ்மேனா இருக்கார். நான் பொறந்தது கிருஷ்ணகிரியில படிச்சது வளர்ந்தது எல்லாமே சென்னையிலதான். சோ...நான் பக்கா அக்மார்க் தமிழ் பொண்ணு.
* சினிமா அனுபவம் எப்படி இருந்திச்சு?
ஹாலிவுட் சினிமாக்கள் நிறைய பார்த்திருக்கேன். ஆனா அதில் நடிப்பேன்ங்றது கொஞ்சமும் எதிர்பார்க்கல. சினிமா பற்றி நிறைய கத்துக்கிட்டேன். நிறைய பிரண்ட்ஸ் கிடைச்சாங்க. நடிப்பு மட்டுமல்ல சினிமா டெக்னிக்கையும் கத்துக்க முடிஞ்சுது.
* இயக்குனர் ஆங் லீ பற்றி...?
எனக்கு குரு மாதிரி. ஆரம்பத்துல எனக்கு இருந்த பயத்தைப் போக்கி நடிக்க வச்சார். இந்திய பெண்களோட மேனரிசத்தை அணுஅணுவாக தெரிந்து வைத்திருந்தார். அதை அப்படியே என்கிட்ட வாங்கினார். எத்தனை டேக் போனாலும் சிரிச்சுக்கிட்டே அடுத்த டேக்குக்கு தயாராயிடுவார். நேரம் தவறாமை, சுறுசுறுப்பு, ஹார்ட் ஒர்க், டெடிக்கேஷன் எல்லாத்தையும் அவர்கிட்ட கத்துக்கிட்டேன்.
* ஹாலிவுட் படத்தில் நடிக்க எப்படி துணிச்சல் வந்தது?
ஆரம்பத்துல பயமாத்தான் இருந்திச்சு. ஹாலிவுட் படம்னாலே முத்தக்காட்சி அதுஇதுன்னு தான் கற்பனை ஓடிச்சி. ஆனா பக்கா பாண்டிச்சேரி பரதநாட்டிய பொண்ணு கேரக்டர்னு தெரிஞ்ச பிறகுதான் தைரியம் வந்து நடிக்கவே ஒப்புக்கிட்டேன். என்னோட காட்சிகளை மட்டும் பார்த்தா தமிழ் படம் மாதிரிதான் இருக்கும்.
* தொடர்ந்து நடிப்பீங்களா?
இப்போ நான் பிளஸ்-2 படிச்சிட்டிருக்கேன். எக்ஸாமுக்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கு. இரவு பகலா படிச்சிட்டிருக்கேன். பிளஸ்-2 முடிச்சிட்டு நல்ல வாய்ப்பு வந்தா நடிப்பேன். இல்லேன்னா டிகிரி பண்ணுவேன்.
* எந்த மாதிரி கேரக்டர்களை எதிர்பார்க்குறீங்க?
கிளாமரு, டூயட்டுன்னு இல்லாம நல்லா நடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குற கனமான கேரக்டரா இருந்தா நடிப்பேன். நாட்டியம் சம்பந்தமான படமா இருந்தா டபுள் சந்தோஷம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment