30 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும்’ பொய் செய்தி வெளியிட்டதாக ‘குமுதம்’ மீது நடிகை வழக்கு : செய்தி வெளியிட தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு!!!

Friday,1st of March 2013
சென்னை::உண்மைக்குப் புறம்பாக, பொய்யான செய்தியை வெளியிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.30 லட்சம் நஷ்டஈடு கேட்டு நடிகை லட்சுமிராய் (20) தொடர்ந்த வழக்கில், லட்சுமிராய் தொடர்பாக செய்தி வெளியிட்ட குமுதம் வார இதழுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேத்துப்பட்டில் குடியிருக்கும் நடிகை லட்சுமிராய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 37 படங்களில் நடித்துள்ளேன். தமிழில் கற்க கசடற, மங்காத்தா, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளேன். மேலும், ‘ஒன்பதுல குரு’ படத்திலும் நடித்து வருகிறேன்.

திரைப்படத் துறையில் எனக்கு நல்ல பெயர் உள்ளது. பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியிருக்கிறேன். இந்நிலையில், பிப்ரவரி 27ம் தேதி வெளிவந்த குமுதம் வார இதழில் ‘ஒரே அறையில் ஹீரோவுடன் தங்கினால் தப்பா?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அந்த செய்தி முற்றிலும் பொய்யான, உண்மைக்கு முரணான செய்தியாகும். எந்த வித அடிப்படை ஆதாரமும¢ இல்லாமல் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளிவந்ததால் என்னால் எனது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் பதிலும் விளக்கமும் சொல்ல முடியாமல் திணறுகிறேன். மற்றவர்களைப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான ஒரு செய்தி என்னைப் பற்றி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் எனக்கு குடும்பத்திலும், பொது வாழ்க்கையிலும், சினிமா துறையிலும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்டதால் எனக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரும¢ அவமரியாதை ஏற்பட்டு விட்டது. எனவே, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்ட ‘குமுதம்’ வார இதழ், நிருபர் தேனி கண்ணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட இழப்புக்காக குமுதம் நிறுவனம் ரூ.30 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும். மேலும், எனது தொடர்பான செய்திகளை வெளியிட குமுதம் இதழுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘அடுத்த உத்தரவு வரும்வரை குமுதம் இதழில் லட்சுமிராய் தொடர்பான செய்திகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

Comments