விஸ்வரூபம் விவகாரத்தில் கமலுக்கு ஆதரவு தந்தால் தப்பா.. பாரபட்சமாக நடக்காதீர்கள்.. நடிகர் சங்கத்துக்கு விஷால் சூடு!!!

Thursday,21th of February 2013
சென்னை::விஸ்வரூபம் விவகாரத்தில் மற்ற நடிகர் நடிகையர்ஆதரவு தெரிவித்தது போல நானும் தெரிவித்தேன். இது தவறா...குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்காமல், வெளிப்படையாக,பாரபட்சமின்றி நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கிய, விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில், சிக்கல் ஏற்பட்டபோது, நடிகர், நடிகைகள் பலர், கமலுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிரச்னையில், நடிகர் சங்கம் ஆதரவு தெரிவிக்கவில்லை என அப்போது புகார் எழுந்தது. உண்மையும் அதுதான். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரோ அல்லது நிர்வாகிகளோ பகிரங்கமாக கமலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. சரத்குமாரோ,கமலை சந்திக்கவே இல்லை.

இந்நிலையில், பேஸ்புக்கில், விஸ்வரூபம் படப் பிரச்னையில், நடிகர் சங்கம் கமல்ஹாசனுக்கு உதவவில்லை என விஷால் கருத்து தெரிவித்தார். இதற்கு விளக்கம் கேட்டு, நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியது.

இதற்கு பதிலளித்து, விஷால் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் காரசாரமாக கூறியிருப்பதாவது:

நமது நடிகர் சங்கத்தின் மூத்த நடிகர் கமல்ஹாசனின், விஸ்வரூபம் படம் தொடர்பாக, எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை, அவருக்கு ஆதரவாக, இணைய தளத்தில் தெரிவித்திருந்தேன். என்னைப் போலவே, பல நடிகர்களும் கருத்து வெளியிட்டனர்.

என் கருத்தில் தவறு இல்லை. நடிகர் சங்க உறுப்பினர்களை, நான் விமர்சிக்கவில்லை. விஸ்வரூம் பட பிரச்னையில், கமலுக்கு ஆதரவாக இருந்தோம். ஆனால், நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தை கூட்டியோ, அவசர பொதுக்குழு கூட்டத்தை கூட்டியோ, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, கமலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

நம் சங்க செயல்பாடுகள் மற்றும் வழக்குகள் குறித்து, பல உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர். அது போல், நானும் என் கருத்தை தெரிவித்துள்ளேன். நம் சங்கத்தின் சார்பில், இளம் நடிகர்கள், சி.சி.எல்., கிரிக்கெட்டில் பங்கேற்று, பிரதிபலன் பாராமல் விளையாடினோம். அதன் மூலம் வந்த வருவாயை, நலிந்த நடிகர்களுக்கு பெற்றுக் கொடுத்தோம்.

ஆனால், நான் நடித்து, சமீபத்தில் வெளியான, சமர் படத்தில், எனக்கு வரவேண்டிய பாக்கித் தொகையை பெறுவதற்கு, நான் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், எனக்கு எந்தவிதமான முழுமையான உதவியும் சங்கம் மூலம் செய்யப்படவில்லை.

என் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, என்னை போன்ற இளம் நடிகர்களை புண்படுத்தாமல், சங்கச் செயல்பாடுகளை சங்க உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும், சங்கத்தை குறிப்பிட்ட சில நபர்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தாமல், வெளிப்படையாக செயலாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று விஷால் கூறியுள்ளார்.

விஷாலின் இந்த சூடான,அதிரடியான கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில்வருகிற 28ம் தேதி விவாதிக்கப்படவுள்ளதாம்.

Comments